லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி
குரூப் 1 தேர்வில் போலி தமிழ் வழிக் கல்வி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது.
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு வழங்குவது சட்டவிரோதம். இதனால் தமிழ் வழிக்கல்வி சலுகை அடிப்படையில் குரூப் 1 தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை கோரி வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. அந்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில், தமிழ் வழிக்கல்விச் சலுகை அடிப்படையில் 34 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் சான்றிதழ்கள் போலியானது எனக் கூறப்பட்ட நிலையில் ஒருவரின் சான்றிதழ் உண்மை என தெரியவந்துள்ளது. போலி சான்றிதழ்கள் குறித்து மற்ற பல்கலைக்கழகங்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. அந்த பல்கலைக்கழகங்கள் வழங்கிய சான்றிதழ் சரிபார்க்கப்படவும் இல்லை. பல்லைக்கழகங்கள் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுபவர்களை வேகமாக கைது செய்யும் போலீஸார், கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கும் பெருமுதலைகளை விட்டு விடுகின்றனர். விசாரணை அதிகாரிகள் பல்கலைக்கழகங்களில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். விசாசரணை நவ. 27க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சோதனையிடவும், கைது செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகாரம் உண்டு.
இதுபோன்ற சம்பவங்களால் அரசுத் தேர்வுகளை நம்பி நாட்டின் கடைகோடியில் உள்ள ஏழை மாணவன் முதல் நல்ல மதிப்பெண் பெற படிக்கும் மாணவர்களின் மொத்த வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது.