நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 160 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நெதர்லாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் ஸ்ரேயாஸ், ராகுல் சதம் விளாச இந்திய அணி 50 ஓவரில் 410 ரன் குவித்தது.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் 13வது சீசன் நடக்கிறது. இன்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த கடைசி லீக் போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் விளையாடின. ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி 'டாஸ்' வென்று முதலில் 'பேட்டிங்' தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய சுப்மன், 30 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்த போது சுப்மன் (51) அவுட்டானார். வான் மீகெரென் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரோகித், 44 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 61 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த விராத் கோலி தன்பங்கிற்கு அரைசதம் விளாசினார். இவர், 51 ரன்னில் அவுட்டானார். மறுமுனையில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த லோகேஷ் ராகுல், தன்பங்கிற்கு சதம் விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 208 ரன் சேர்த்த போது ராகுல் (102) அவுட்டானார்.
இந்திய அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 410 ரன் குவித்தது. ஸ்ரேயாஸ் (128), சூர்யகுமார் யாதவ் (2) அவுட்டாகாமல் இருந்தனர். நெதர்லாந்து சார்பில் பாஸ் டி லீடு 2 விக்கெட் வீழ்த்தினார்.
இந்திய அணி சார்பில் களமிறங்கிய முதல் 5 வீரர்களும் அரைசதம் கடந்துள்ளனர். உலக கோப்பை வரலாற்றில் ஒரு அணியின் முதல் 5 வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல்முறை.
411 ரன் வெற்றி இலக்காக கொண்டு அடுத்து களமிறங்கிய நெதர்லாந்து அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் இந்திய அணி 160 ரன்களில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தான் விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் இந்திய அணிக்கு (9)வெற்றி கிடைத்துள்ளது. இந்திய அணியின் பும்ரா, சிராஜ், ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் விராத் கோஹ்லி மற்றும் ரோகித்சர்மா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் விருது ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.