அமலாக்கத்துறை அதிரடி..
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின்
ரூ.538 கோடி சொத்துகள் பறிமுதல்..
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் ‛ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.
இந்தியாவில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான துறையில் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை நரேஷ் கோயல் தொடங்கினர். இந்த நிறுவனம் 26 ஆண்டுகளாக நன்றாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் தான் திடீரென்று நிதி நெருக்கடியில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சிக்கியது. இதைடுத்து அந்த நிறுவனம் கடந்த 2019 ஏப்ரல் மாதத்துடன் செயல்பாட்டை நிறுத்தி கொண்டது.
இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலகினார். அதன்பிறகு நரேஷ் கோயல் தரப்பில் 2019 ஜூன் மாதம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்ககோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் (National Company Law Tribunal) மனு செய்தார்.
இதற்கிடையே தான் நரேஷ் கோயல் கனரா வங்கியில் ரூ.848.86 கோடி கடன் வாங்கியிருந்தார். இதில் அவர் ரூ.538 கோடி அளவுக்கு கடன் வாங்கி கட்டாமல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கனரா வங்கி சார்பில் சிபிஐயில் புகார் செய்யப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் முன்னாள் அதிகாரிகள் மீது வழக்கப்பதிவு செய்தது.
அதோடு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை நுழைந்து விசாரணையை தொடங்கியது. அப்போது பணமோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த மாதம் நரேஷ் கோயலை அமலாக்கத்துறை கைது செய்தது. அதாவது கனரா வங்கியில் வாங்கிய பணத்தை மோசடி செய்து அவர் வருமானம் ஈட்டியது தெரியவந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் அந்த வருமானம் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சொத்துகள் வாங்கியிருப்பதையும் அமலாக்கத்துறை கண்டுப்பிடித்தது. இந்நிலையில் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.
அதாவது பணமோசடி தடுப்பு சட்டம்(பிஎம்எல்ஏ) 2002 என்ற பிரிவின் அடிப்படையில் இந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.538 கோடியாகும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ளவற்றில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், மனைவி அனிதா கோயல், மகன் நிவான் கோயல் ஆகியோரின் சொத்துகள் அடங்கும்.
இந்தியா மட்டுமின்றி பிரிட்டனில் உள்ள லண்டன், துபாய் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பங்களா, வணிக வளாகங்கள் உள்ளிட்ட 17 கட்டடங்களும் அடங்கும். மொத்தம் 17 பங்களாக்கள் அடங்கும் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.