நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 29). இவரது மனைவி நாகதேவி (26). மில் தொழிலாளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 7-ந் தேதி
சூரியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகதேவிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.இந்த நிலையில் 3-வது பெண் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்று தருவதாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் டாக்டர் அனுராதா என்பவரும், கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த புரோக்கர் லோகாம்பாள் என்பவரும் பேரம் பேசியுள்ளனர்.
இதுகுறித்து தினேஷ் திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகாம்பாளிடம் விசாரணை நடத்தியதில் புரோக்கர்கள் மூலம் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.இதையடுத்து புரோக்கர் லோகாம்பாள் மற்றும் அரசு டாக்டர் அனுராதா ஆகியோரை கைது செய்து சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் டாக்டர் அனுராதா பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் நடத்தி வந்த 2 கிளீனிக்குகளும் மாவட்டம் நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் குமாரபாளையத்தை சேர்ந்த புரோக்கர் பாலாமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.