மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வுரிமை நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில மாநாடு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநாட்டுக்கு கூட்ட மைப்பு மாநில தலைவர் ஆர்.ராஜரத்தினம் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் குமார், ஒருங்கிணைப்பாளர் சோமு, மகளிர் அணி தலைவர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வீட்டு வசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். தமிழகத்தில் வசிக்கும் வீடு இல்லாத அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் விலையில்லா வீடு, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். தமிழகத்தில் சுய தொழில் புரியும் மாற்றுத்திற னாளிகளுக்கு நிபந்தனையின்றி ரூ.2 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு 5 ஆயிரம் அரசு வேலைகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். ஒரே குடும்பத்தில் 2 மாற்றுத்திறனாளிகள் இருந்தால் ஒருவருக்கு அரசு வேலை
வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த நிகழ்ச்சியில் சங்கம் கூட்டமைப்பு இணையதள முகவரி துவங்கப்பட்டு, சங்க கூட்டமைப்பு கொடியை அறிமுகப்படுத்தினார்கள். இந்த மாநாட்டில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.