காங்கயம், அவினாசியில் தனியார் நிதி நிறுவனம் ரூ.43 லட்சம் மோசடி செய்த அக்காள்-தம்பி உள்பட 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது
காங்கயம், அவினாசியில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி 1000-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.43 லட்சம் மோசடி செய்த அக்காள்-தம்பி உள்பட 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-தனியார் நிதி நிறுவனம் திருப்பூர் மாவட்டம் காங்கயம் மற்றும் அவினாசியில் என்.கே.பி. பைனான்ஸ் சர்வீசஸ் என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் கடந்த 2 மாதங்களாக செயல்பட்டு வந்தது. சிறு தொழில் தொடங்க தனிநபர் கடன் மற்றும் மகளிர் குழுக்களுக்கு கடன் தருவதாக அந்த நிறுவனத்தினர் விளம்பரம் செய்தனர். இதை நம்பி காங்கயம், அவினாசி பகுதியை சேர்ந்தவர்கள் பணம் செலுத்தினார்கள். பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து விட்டு அந்த நிறுவனத்தை நடத்தி வந்த 3 பேர் தலைமறைவாகி விட்டதாக திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கடந்த 11-ந்தேதி புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் அந்த நிறுவனத்தின் காங்கயம் கிளையில் மகளிர் குழு ஒன்றுக்கு 10 பேர் வீதம் 55 குழுக்கள் மூலமாக 550 பெண்களிடம் தலா ரூ.1,341 என ரூ.7 லட்சத்து 37 ஆயிரத்து 550 வசூலித்துள்ளனர். தனிநபர் கடனுக்காக 261 பேரிடம் தலா ரூ.1,000 வீதம் ரூ.2 லட்சத்து 61 ஆயிரம் வசூலித்துள்ளனர். இன்சூரன்ஸ் உள்ளிட்டவை என கூறி மொத்தம் ரூ.10 லட்சம் வரை வசூலித்துள்ளனர்.
ரூ.43 லட்சம் மோசடி. இதுபோல் அவினாசி கிளையில் 520 பெண்களிடம் தலா ரூ.1,341 வீதம் ரூ.6 லட்சத்து 97 ஆயிரத்து 320, மற்றும் தனிநபர் கடனுக்காக 355 பேரிடம் தலா ரூ.1,000 வீதம் ரூ.3 லட்சத்து 55 ஆயிரம், மற்றும் வங்கியில் கடன் உறுதியாகி விட்டதாக கூறியும் ரூ.13 லட்சம் வரை வசூலித்து ள்ளனர். மொத்தம் பொதுமக்களிடம் இருந்து ரூ.43 லட்சம் வசூல் செய்து விட்டு நிறுவனங்களை மூடிவிட்டு தலைமறைவானது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து மோசடி நபர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக நேற்று திருச்சி மாவட்டம் நவல்பட்டு குண்டூரை சேர்ந்த கோபி (வயது 40), அவருடைய அக்காவான திருச்சி எல்.ஐ.சி. காலனி, கே.கே.நகரை சேர்ந்த தேவிகா (42) மற்றும் திருச்சி பீமநகர் கூனிபஜார் பகுதியை சேர்ந்த ஜான்கென்னடி (34) ஆகிய 3 பேரை அவினாசி அருகே ஆட்டையம்பாளையத்தில் வைத்து தனிப்படையினர் பிடித்தனர். கோபியிடம் இருந்து ரூ.7 லட்சம், தேவிகாவிடம் இருந்து ரூ.3 லட்சம், ஜான்கென்னடியிடம் இருந்து ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.11 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட கோபி என்பவர் தேவகிரி, வினோத், கோபால் என்ற பெயரில் கள்ளக்குறிச்சி, ஈரோடு, தென்காசி, திருச்சி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் இதுபோல் மோசடியில் ஈடுபட்டு 6 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்தது. மேலும் தேவிகா மீது திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இதுபோன்ற மோசடி குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. காங்கயம், அவினாசி கிளைகளில் தேவிகா நிர்வாக இயக்குனர் போல் செயல்பட்டுள்ளார். இவர்கள் பணப்பரிமாற்றம் செய்த 3 வங்கிக்கணக்குகளை போலீசார் முடக்கி உள்ளனர். இந்த மோசடியில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். மீதம் உள்ள பணத்தையும், இவர்களின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து கோபி, தேவிகா, ஜான்கென்னடி ஆகிய 3 பேரையும் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் பாராட்டினார்.சொத்துக்களை முடக்க நடவடிக்கைபின்னர் போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் நிருபர்களிடம் கூறும்போது, 'பொதுமக்கள் செலுத்திய பணத்தை, மோசடி கும்பலிடம் இருந்து மீட்டு பொதுமக்களுக்கு ஒப்படைக்க விரைவில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீதம் உள்ளவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரை 3 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அவர்களின் சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலி நிதி நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம். ஆன்லைனில் வரும் விளம்பரங்களை பார்த்து கடன் வாங்காதீர்கள். நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் முன் காவல்துறையிடம் தெரிவித்து சரிபார்த்துக்கொள்ளலாம்' என்றார்.