தமிழ் மாதமான புரட்டாசியில் பெருமாளுக்கு பக்தர்கள் விரதம் கடைபிடித்து வழிபட்டு வருகின்றனர். இதில் சனிக்கிழமை அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனைத் தொடர்ந்து கோட்டை பத்திரகாளியம்மன் திருக்கோவில் சார்பாக, ஈரோடு கோட்டை பெருமாள் திருக்கோவில் கமலவல்லி தாயார் சமேத கஸ்தூரி ரங்கநாதர் பகவானுக்கு, 300க்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றிலை பாக்கு,துளசி, தாமரைப்பூ, நாமக்கட்டி, பழம், தேங்காய், மஞ்சள் சரடு, வளையல்கள், பெரிய லட்டு, நெல்லிக்காய், ஆப்பிள், சாத்துகுடி, மாதுளை, கொய்யா,மிச்சர், முறுக்கு, கடலைப்பர்ப்பி, பிஸ்கட், சாக்லேட், குளிர்பானங்கள் போன்ற சீர்வரிசை பொருட்களுடன் தாம்பால தட்டை தன் தலையில் சுமந்து கொண்டு கோட்டை பத்திரகாளியம்மன் கோவில் வழியாக தில்லை நகர், வாசுகி வீதி, தெப்பக்குளம் பிள்ளையார் கோவிலின் எதிரோட்டின் வழியாக, காமராஜர் வீதி வழியாக கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் பெருமாள் கோவிலை சென்றடைந்து, சீர்வரிசை கொண்டு சென்ற பெண்கள் பெருமாளை தரிசனம் செய்து விட்டு மீண்டும் மண்டபத்திற்கு திரும்பினர். இந்த நிகழ்ச்சி 15-வது வருடம் என்பதால் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுமார் 800-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். இந்நிகழ்ச்சி திருமண தடைகள் நீங்க, நினைத்த நல்ல காரியம் நிறை வேற வேண்டி சீர்வரிசை பொருட்கள் உடன் அவரவர் ஜாதகம் வைத்து சிறப்பு அர்ச்சனைகள் செய்து கும்பத்துடன் வழிபட்டால் நன்மை நடக்கும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும் வந்தவர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.