ஈரோடு கொல்லம் பாளையம்-சோலார் பிரிவு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர். அந்த வாகனத்தில் 4 பேர் இருந்தனர். அவர்களை விசாரித்த போது அவர்கள் பாண்டிச்சேரியை சேர்ந்த சத்யராஜ், விக்னேஷ், உதயகுமார், செல்வம் என தெரிய வந்தது. சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது வாகனத்தில் ரகசிய அறை இருந்தது. அதை திறந்து பார்த்தபோது 42 பெட்டிகளில் 2000த்துக்கும் மது பாட்டில்கள் கடத்திக்கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து மதுவிலக்கு போலீசார் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சிறப்பாக பணியாற்றிய மதுவிலக்கு டிஎஸ்பி பவித்ரா, காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர் குகனேஸ்வரன் மற்றும் காவலர்கள் ஆகியோர்களை ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் வெகுவாக பாராட்டினார்.