ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஈரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்றும் லேசா னது முதல் கனமழை பெய்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் வெயில் போன்று வெயில் பதிவாகி வருவதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில் நேற்றும் ஈரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக ஈரோட்டில் நேற்று மாலை சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. பின்னர் சிறிது நேரம் நின்ற மழை பின்னர் கனமழையாக மாறியது. சுமார் கால் மணி நேரத்திற்கும் மேலாக பெய்து ஓய்ந்தது.
கடந்த சில நாட்களாகவே, சத்தி, கொடுமுடி, கோபி, கவுந்தப்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஈரோட்டில் நேற்று பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மாநகராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
நாச்சியப்பா வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி, மேட்டூர் ரோடு, மீனாட்சி சுந்தரனார் ரோடு, ஆர்கேவி ரோடு, பெருந்துறை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. வழக்கம்போல், ஈரோடு வஉசி மார்க்கெட் பகுதி சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அவதிப்பட்டனர். மழையின் காரணமாக சில நாட்களாக மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது