ஈரோடு கோட்டையில் மிகவும் பிரசித்தி பெற்ற கஸ்தூரி அரங்கநாதர் (பெருமாள்) கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா கிராமசாந்தி பூஜையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் காலையில் யாகசாலை பூஜையும், திருமஞ்சனமும் நடந்தது.
இரவில் அன்னபறவை வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருடசேவை, யானை வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி திருவீதிஉலா சென்றார். இரவில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் இருந்து தொடங்கிய தேரோட்டம் ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, மீனாட்சி சுந்தரனார் சாலை, காமராஜர் வீதி வழியாக சென்று மாலையில் நிலை வந்தடைந்தது. இதில் பக்தர்கள் பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தார்கள். அப்போது தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் "கோவிந்தா, கோவிந்தா" என்று பக்தி கோஷங்களை எழுப்பி நடனமாடி ஊர்வலமாக சென்றனர்.