Type Here to Get Search Results !

காண்டூர் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் திருமூர்த்தி அணை வந்தடைந்தது

காண்டூர் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் திருமூர்த்தி அணை வந்தடைந்தது

உடுமலை : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாலாற்றை தடுத்து திருமூர்த்தி அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாலாறு, உழுவிஆறு, கொட்டையாறு, பாரப்பட்டிஆறு, குருமலைஆறு, வண்டியாறு, உப்புமண்ணம்ஓடை, கிழவிபட்டிஓடை உள்ளிட்ட ஆறுகள், ஓடைகள் நீராதாரமாக உள்ளன. அது தவிர அணையின் உயிர்நாடியாக அப்பர்நீராறு, லோயர்நீராறு, சோலையாறு, ஆனைமலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியார், அப்பர் ஆழியார் உள்ளிட்ட அணைகள் விளங்கி வருகிறது.இந்த அணைகளுக்கும் திருமூர்த்தி அணைக்கும் காண்டூர் கால்வாய் இணைப்பு பாலமாக உள்ளது. இந்த கால்வாய் பரம்பிக்குளம் அணையில் தொடங்கி சர்க்கார்பதி மின்உற்பத்தி நிலையத்தை கடந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதி வழியாக திருமூர்த்தி அணையை வந்தடைகிறது. அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர்இருப்பை பொறுத்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தின் கீழ் பாசன வசதி பெற்று வருகிறது.பழைய ஆயக்கட்டு பாசனத்தில் தளி மற்றும் வளையபாளையம் வாய்க்கால் மூலம் 3 ஆயிரத்து 44 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் அணையை ஆதாரமாகக்கொண்டு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. இதனால் திருமூர்த்தி அணை மற்றும் பி.ஏ.பி. தொகுப்பு அணைகள் போதிய நீர்வரத்து கிடைக்காமல் தவித்து வந்தது. இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதியில் இருந்து காண்டூர் கால்வாயில் புனரமைப்பு பணி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவுற்ற நிலையில் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.அந்த தண்ணீர் அடர்ந்த வனப்பகுதியின் வழியாக பயணித்து திருமூர்த்தி அணையை வந்தடைந்தது. இதனால் அணையின் நீர் இருப்பு உயர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.பாசனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் நீர் ஆதாரங்கள் நீர்வரத்தை இழந்து தவித்து வருகிறது. இதனால் அணையில் நீர்இருப்பு உயர்ந்த பின்பு 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.