பொங்கலூர் அருகே உள்ள புத்தெரிச்சல் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த வஜ்ரவடிவேல் என்பவரது மகன் சந்தோஷ் (வயது 13). இவன் புத்தெரிச்சலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு குட்டையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தான். பின்னர் தனது நண்பரை பார்க்க ஓடிவந்த போது அந்த வழியில் இருந்த ஒரு கிணற்றில் தவறி உள்ளே விழுந்து விட்டான்.
இதை அந்த பகுதியில் நின்றவர்கள் பார்த்து மாணவனை காப்பற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி மாணவரை தேடினர். அப்போது மாணவன் உயிரிழந்த நிலையில் மிதந்தான். இதையடுத்து மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.