*பொறியாளர்கள் தினம்*
இந்தியப் பொறியியலின் தந்தை சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா அவர்களின்163 வது பிறந்தநாள்.
இந்தியாவில் பொறியாளர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தில்தான் 1860-ம் ஆண்டு இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா பிறந்தார். இது அவருக்கு 163 வது பிறந்த நாள்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள முட்டனஹள்ளி கிராமத்தில் பிறந்தாலும் இவரது முன்னோர்கள் ஆந்திர மாநிலத்தின் மோக்சகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதனால் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா என்று பெயர் சூட்டினார்கள். 12 வயதிலேயே தந்தையை இழந்ததால், மிகவும் கஷ்டப்பட்டு கல்வியைத் தொடர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் புனே பல்கலைக்கழகத்தின் காலேஜ் ஆப் எஞ்சினியரிங் கல்லூரியில் படித்த இவர், மும்பை பொதுப் பணித்துறையில் பணியாற்றி, பிறகு இந்திய நீர்பாசனத்துறை கமிஷனில் பொறியாளராக அரசால் நியமிக்கப்பட்டார். அரசாங்கப் பணியில் இருந்தாலும் புதிய விஷயங்களைச் செய்து பார்ப்பதில் ஆர்வமாக இருந்தார் விஸ்வேஸ்வரய்யா.
அங்கு அவர் தக்காண பகுதியில் பயனுள்ள நீர்ப்பாசன நுட்பங்களை வடிவமைத்து செயல்படுத்தினார். சர் எம்வி தன்னியக்க தடுப்பு நீர் வெள்ளக் கதவுகளை வடிவமைப்பதற்கான காப்புரிமையைப் பெற்றிருந்தார். 1903 ஆம் ஆண்டு புனேவிற்கு அருகில் உள்ள கடக்வாஸ்லா நீர்த்தேக்கத்தில் இந்த தானியங்கி வெள்ள மதகு முதலில் நிறுவப்பட்டன. பின்னர் திக்ரா அணை மற்றும் கிருஷ்ண ராஜ சாகரா அணையில் இதேபோன்ற தானியங்கி வெள்ள மதகு கதவு வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டன.
1906-07 ஆம் ஆண்டில் ஏடனுக்கு நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பில் உள்ள பல்வேறு நுட்பங்களை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் சர் எம்வி அனுப்பப்பட்டார். ஹைதராபாத் நகரத்தை வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான வெள்ள பாதுகாப்பு திட்டத்தை வகுத்தார்.வெள்ளம் இல்லாத நகரமாக ஹைதராபாதை மாற்ற அவர் செய்தபங்களிப்புக்காகவும் அவர் அங்கீகரிக்கப்பட்டவர்.
துறைமுகங்களில் கடல் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான தடுப்பு அமைப்புகளை உருவாக்கினார். அவரது யோசனைகள் படி விசாகப்பட்டினம் துறைமுகம் கடல் அரிப்பிலிருந்து காப்பாற்ற உதவியது.
மைசூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜ சாஹர் அணை கட்டும்போது தலைமைப் பொறியாளராக பணிபுரிந்தவர். இந்த அணை கட்டும்போது, ஆசியாவின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாக கருதப்பட்டது மட்டுமல்லாமல், பல தொழில்நுட்ப வல்லுனர்களால் பாரட்டப்பட்டது.
இது இவரது மிகப்பெரிய சாதனைகள் ஆகும். இது விஸ்வேஸ்வரய்யாவுக்குப் புகழைத் தேடித் தந்தது.
1894-ம்ஆண்டு மைசூருக்கு அருகில் ஆசிரியாவிலேயே முதல் நீர்மின் உற்பத்தி ஆலையை அமைக்கக் காரணமாக இருந்தார்.
மைசூர் திவானாக ஏழு ஆண்டுகள் பதவி வகித்த இவர் 'நவீன மைசூரின் தந்தை' எனவும் அழைக்கப்படுகிறார்.
பத்ராவதி எஃகு ஆலை, மைசூர் பல்கலைக்கழகம், தொழிற்சாலைகள், அரசு பொறியியல் கல்லூரி போன்றவற்றை உருவாக்கினார்.
சர் எம்.வி" என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
விசுவேசுவரய்யா செயல்பாடுகளை பாராட்டும் வகையில், நாட்டின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா 1955ல் வழங்கப்பட்டது.
1962-ம் ஆண்டு 101 வயதில் மறைந்தார்.
விசுவேசுவரய்யாவிற்கு மரியாதை செய்யும் வகையில், இவரது பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தியாவின் முதன்மைப் பொறியாளரை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது இந்தத் தினத்தையொட்டி பொறியியல் துறையின் மகத்துவத்தையும் பறைசாற்றும் விதமாக ஈரோடு மாவட்டம் கட்டப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிப் பாதையிலும் பொறியாளர்களின் பங்கு இன்றியமையாதது. அப்படிப்பட்ட பொறியாளர்கள் அனைவருக்கும் இனிய பொறியாளர் தின வாழ்த்துகள