Type Here to Get Search Results !

கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி

கிராமம், கிராமமாக சென்று மக்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர் மூர்த்தி, தனது கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் ஒவ்வொரு கிராமமாக சென்று மக்களை சந்தித்து அவர்களது குறைகளை தீ்ர்த்து வருகிறார். அதன்படி நேற்று ஒரே நாளில் அவர் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பிலான 24 திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அமைச்சர் மூர்த்தி, மாங்குளம், மாத்தூர் ஆகிய கிராமப் பகுதியில் உள்ள மக்களை சந்தித்த போது, தங்கள் கிராமங்களில் கூடுதலாக குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். உடனே அமைச்சர், அந்த கிராமப் பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைத்து சீரான குடிநீர் வினியோகம் வழங்கிட ஏதுவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சித்துறை உதவிப் பொறியாளருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, வரிச்சியூர் ஊராட்சியில் உள்ள உறங்கான்பட்டி கிராமத்தில் அரசு பள்ளி சுற்றுச் சுவரை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, பள்ளியில் ஆய்வு மேற்கொண்டபோது பள்ளியின் தேர்ச்சி விகிதம் மற்றும் மாணவர் சேர்க்கை விகிதம் குறித்து கேட்டறிந்தார்.

பட்டா ஆணை

மேலும், கார்சேரி கிராமம், கிழக்குத் தெரு பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு பட்டா ஆணை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். இது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு உடனடியாக பட்டா ஆணை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் கோட்டாட்சியருக்கு அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் வழங்கியுள்ள கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வுகாண அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் சரவணன், வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடன் உதவி

அதனைத்தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் திருமோகூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு தொழிற்கூடத்தில் 222 மகளிர் குழுக்களுக்கு ரூ.11.27 கோடி மதிப்பீட்டில் கடனுதவிக்கான காசோலையை வழங்கி பேசினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.