தாளவாடி:ஈரோடு மாவட்டம் தாள வாடி பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சத்திய மங்க லம், கோவை, ஈரோடு மற்றும் கர்நாடகா மாநிலம் மைசூர், சாம்ராஜ்நகர் செல்வதற்கு தாளவாடி வந்து செல்வது வழக்கம். அதேபோல மலைக் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க தினந்தோறும் தாளவாடி சென்று வருவது வழக்கம்.இதனால் எப்பொழுதும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் சிலர் தங்களது கால்நடைகளான மாடுகளை பகல் நேரங்களில் தாளவாடியில் உள்ள முக்கிய பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அனுப்பி விடுகின்றனர்.எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலைகளில் 20-க்கும் மேற்பட்ட மாடுகள் பகல் நேரங்களில் முக்கிய சாலையில் உலா வருவதும் சாலையில் படுத்துக்கொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவ துடன் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அவ்வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். சில மாடுகள் ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டு பேருந்துக்காக காத்து நிற்கும் பயணிகள் மீது விழுகிறது. இதனால் பயணிகள் அச்சத்துடனே பேருந்து நிலையத்தில் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இது குறித்து ஊரா ட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் தாளவாடி ஊராட்சி மற்றும் காவல் துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் தாளவாடி பேருந்து நிலையம், ஓசூர் சாலை, சாம்ராஜ்நகர் சாலை, தலமலை சாலை, தொட்ட காஜனூர் பகுதியில் தங்களது மாடுகளை வீட்டுக்கு பிடித்து செல்ல வேண்டும் எனவும் மீறி சாலையில் சுற்றித்திரிந்தால் மாடுகளை பறிமுதல் செய்து மாட்டின் உரிமையாளர்க்கு அபராதம் விதிக்கப்படும் என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்த சென்ற சிறுமியை மாடு ஒன்று முட்டி தாக்கும் வீடியோ சமூகங்களில் வைரல் ஆனது. இதைத்தொடர்ந்து மாடுகளை வீதியில் திரிய விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.