ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர் வி.ஏ.ஆண்டமுத்துவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆண்டமுத்து (வயது 82). இவர் வயது முதிர்வால் காலமானார்.
இந்நிலையில் இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், திமுகவின் மூத்த செயல்வீரருமான வி.ஏ. ஆண்டமுத்து மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். திமுகவின் மீதும், கலைஞர் மீதும் மிகுந்த பற்று வைத்திருந்த அன்னாரது மறைவு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், திமுகவினர் மற்றும் பவானிசாகர் தொகுதி மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”என தெரிவித்துள்ளார்.