தீவன விதை சாகுபடியாளர்களுக்கு பயிற்சி
ஈரோடு:ஈரோடு மாவட்டம் சித்தோடு ஆவின் நிறுவனம் அருகே உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய பயிற்சி மையத்தில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தீவன விதை சாகுபடியாளர்களுக்கு ஈரோடு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மோகனசுந்தரம் தரமான தீவன சான்று விதை உற்பத்தி குறித்து பயிற்சியளித்தார்.இப்பயிற்சியின்போது பயிர் சாகுபடி செய்ய வேண்டிய பருவம், ரகம் தேர்வு, பயிர் விலகுதூரம் கடைபிடித்தல், விதை நேர்த்தி, விதைப்பு முறைகள் மற்றும் உர நிர்வாகம் குறித்து பயிற்சியளித்தார். விதைச்சான்று அலுவலர் (தொழில்நுட்பம்) ராதா விதைப்பறிக்கை பதிவு செய்தல் மற்றும் சான்று கட்டண விவரங்களை கூறினார். மேலும் பவானி விதைச்சான்று அலுவலர் தமிழரசு கலவன்களை அகற்றுதல், ஒருங்கிணைந்த முறையில் படைப்புழு மேலாண்மை செய்தல், அறுவடையின்போது கவனிக்க வேண்டியவை, முத்திரையிடுதல், விதைசுத்தி மற்றும் சான்றட்டை பொருத்துதல் குறித்து பயிற்சியளித்தார்.தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் முதுநிலை மேலாளர் (கூட்டுறவு) கிருத்திகா நடப்பு ஆண்டில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் ஆப்பிரிக்கன் டால் என்ற தீவன மக்காச்சோளம் ரகத்தினை விதைப்பண்ணையாக அமைத்து கிடைக்கப்பெறும் சான்று பெற்ற விதைகளை விவசாயிகளுக்கு சிறு தளைகளாக வழங்க உள்ளதாக தெரிவித்தார்.இப்பயிற்சில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். ஆவின் கால்நடை டாக்டர்.பாபு இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.