பவானி:பவானி அருகில் உள்ள ஊராட்சிக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி பவானி வட்ட வழங்கல் துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. பவானி வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகாயி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் ஊராட்சிக் கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் ரேஷன் கார்டில் பெயர் நீக்கல், பெயர் சேர்த்தல் போன்றவற்றிக்கு மனு வழங்கினர். அதேபோல் தாங்கள் வைத்திருந்த ரேஷன் கார்டு காணாமல் போயிருந்தால் பழைய ரேஷன் கார்டு ஜெராக்ஸ் மற்றும் உரிய ஆவணங்களளை கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தால் அவர்களின் முகவரிக்கு ரேஷன் கார்டு கிடைக்க பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கான மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த முகாமில் புதிய ரேஷன் கார்டு வேண்டி எந்த ஒரு மனுவும் பொதுமக்களிடம் இருந்து பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த முகாமில் ஊராட்சி கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் குணசேகரன், எழுத்தர் ஈஸ்வரன், ரேஷன் கடை விற்பனையாளர் ராதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.