மேட்டூர் காவிரி ஆற்றில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
சேலம்:காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலா கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அனைவரது வாழ்வில் காவிரி போல மகிழ்ச்சியும், வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபாடு செய்வது வழக்கம். மேள தாளங்கள்....அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி தொலை தூர கிராம மக்கள் தங்களது குல தெய்வங்களை தலையில் சுமந்த படி விடிய விடிய நடந்து வந்து ஆடி 18 அன்று மேட்டூர் காவிரியில் நீராட்டி மீண்டும் தங்களது கிராமங்களுக்கு மேள தாளங்களுடன் எடுத்து செல்வார்கள். பொது மக்களும் காவிரியில் நீராடி மகிழ்வார்கள். புது மண தம்பதியர் தங்களது திருமண மாலைகளை வாழை இலையில் வைத்து வழிபட்டு காவிரி ஆற்றில் விட்டு செல்வார்கள்.
இதற்காக தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் மேட்டூருக்கு 1 லட்சத்திற்கும் அதிக மான பொது மக்கள் வந்து செல்வார்கள். கூடுதல் பாதுகாப்பு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம், டி.எஸ்.பி. மரியமுத்து ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அணை கட்டு முனியப்பனை பக்தர்கள் இடையூறின்றி தரிசித்து செல்ல முனியப்பன் கோவில் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. பொது மக்கள் முண்டியடித்து செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பொது மக்கள் நீராட காவிரி பாலப்பகுதியில் உள்ள 2 படித்துறைகள், மட்டம் பகுதியில் உள்ள 3 படித்துறைகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் மற்ற பகுதிகளில் குளிக்க அனுமதி கிடையாது. மேட்டூர் நகராட்சி சார்பில் தற்காலிக உடைமாற்றும் அறைகள் , கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் மேட்டூர் டி.எஸ்.பி. தலைமையில் 200 போலீசார் ஊர்க்காவல் படையினர், என்.எஸ்.எஸ். மாணவர்கள், சாரண சாரணியர்கள் ஈடுபடுகிறார்கள். ஆம்புலன்ஸ்கள் தீயணைப்பு வீரர்கள் 20 பேர் காவிரி கரையில் படகுகளில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட உள்ளனர். 5 பரிசல்கள், ரப்பர் படகுகள் நிறுத்தப்படும் . தற்காலிக புறக்காவல் நிலையம், முதல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தயார் நிலையில் ஆம்புலன்ஸ்களகள் , தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 5 இடங்களில் கண்கா ணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இது தவிர 12 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு காவல் உதவி மையத்தில் இருந்து போலீசார் கண்காணிக்கிறார்கள். சேலம், மேச்சேரி, ஈரோடு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டூர் அரசு ஆண்கள் பள்ளியிலும், கூடுதலாக வாகனங்கள் வந்தால் 4 ரோடு பகுதியிலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொளத்தூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மேட்டூர் அணை வலது கரை பகுதியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தப்பட வேண்டும், திருடர்கள், குற்ற வாளிகளை கண்காணிக்க சாதாராண உடையில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முதல் ஆடிப்பெருக்கு விழாவிற்கான கடைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் காவிரி கரையோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.