அகில இந்திய வங்கி ஊழியர் சங்க(AIBEA) பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் ஆதரவுடன், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் வைரப்பன் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கி நகர ஊழியர் சம்மேளனம் பொதுச் செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர்களின் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தங்களது சட்டையில் கோரிக்கைகள் அடங்கிய பேச் கார்டு அணிந்து கூட்டுறவு சங்க பணியாளர்கள் வழக்கம்போல் பணிகளை செய்து வந்தனர்.
இந்த அடையாள அட்டையில் கூட்டுறவு நகர வங்கியில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் அனுமதிக்க கோரியும் அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோப்பின் மீது தொடர் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க கூறியும், கூட்டுறவு நகர வங்கிகளில் காலியாக உள்ள உயர் பதவிகளுக்கு உரிய பதவி உயர்வு வழங்கி ஆணையிட கோரியும் கூட்டுறவு நகர வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் உரிய பணி நியமனங்கள் மூலம் நிரப்பக் கோரியும், வங்கி வாடிக்கையாளர்களுக்கு நவீன சேவைகளை வழங்கிடும் வகையில் மென்பொருளை மேம்படுத்த கோரியும், நிறுத்தி வைத்துள்ள உரிமை விடுப்பில் ஆண்டுதோறும் பணமாக்கும் சலுகையை மீண்டும் அனுமதிக்க கோரியும் என ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பணியாளர்கள் தங்களது சட்டைகளில் கோரிக்கைகள் அடங்கிய அடையாள அட்டையை அணிந்து அமைதியான முறையில் தங்களது பணிகளை வழக்கம்போல் செய்தனர்.