ஆக்கிரமிப்பை அகற்றிய கோவை மாநகராட்சி
கோவை, கோவை காந்திபுரத்தில் மாநகர பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து உக்கடம், சிங்காநல்லூர், ரெயில் நிலையம், காந்தி பார்க், வடவள்ளி, மருதமலை, சுந்தராபுரம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் செல்கின்றன. இதனால் எப்போதுமே காந்திபுரம் மாநகர பஸ் நிலையம் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும். பொதுமக்கள் வருவதும், போவதுமாகவே இருப்பார்கள்.இந்த பஸ் நிலையத்தில் நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் வந்தது.புகாரின் பேரில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில் மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியர்கள் மாநகர பஸ் நிலையத்திற்கு வந்தனர்.அவர்கள் அங்கு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த டீக்கடை, செல்போன் கடை, செருப்பு கடை உள்பட 25 கடைகளை அகற்றினர். இதனையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-காந்திபுரம் மாநகர பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு இடையூறாக இருந்த 25 கடைகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு மீண்டும் கடைகள் வைக்காதவாறு கண்காணிக்கப்படும். நடைபாதையை ஆக்கிரமித்து அனுமதி இல்லாமல் கடைகள் வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.