மறைந்த திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் 60வது பிறந்தநாளை முன்னிட்டு கூகல் இணையத்தளம் ‘டூடல்’ படத்தை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீதேவியின் நளினமான நடன முத்திரையுடன் அவரைச் சுற்றிலும் வண்ண மலர்கள் இருப்பதுபோன்று சித்திரிக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த கலைஞர் பூமிகா முகர்ஜி அதனை வரைந்துள்ளார்.
1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழ்நாட்டில் பிறந்த ஸ்ரீதேவி, தனது நான்காவது வயதில் கந்தன் கருணை எனும் படத்தில் அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து 40 ஆண்டுகள் கிட்டத்தட்ட 300 படங்களில் அவர் நடித்தார். பல தென்னிந்திய மொழிகளைப் பேசக் கற்றிருந்த அவர், தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் மட்டுமன்றி இந்தித் திரையுலகிலும் தனது முத்திரையைப் பதித்தார்.
சில காலம் வெள்ளித்திரையில் இருந்து விலகி இருந்த அவர் சின்னத்திரையில் கவனம் செலுத்தினார். பின்னர் ஆசிய திரைப்பட, தொலைக்காட்சிக் கல்விக் கழக இயக்குநர் குழுவில் பணியாற்றினார்.
2012ஆம் ஆண்டு ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படம் மூலம் மீண்டும் புகழின் உச்சியை அடைந்தார். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற சிறப்பும் ஸ்ரீதேவிக்கு உண்டு.