ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வில்
பேராசிரியர் த. இராஜாராம், கவிஞர் கே. ஜீவபாரதி பங்கேற்பு…
19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் 09.08.2023 ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வுக்கு அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் எம்.சின்னசாமி தலைமையேற்றார்.
மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.
கவிஞர் கே.ஜீவபாரதி ‘ பாரதி வழியில் பட்டுக்கோட்டை ‘ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மகாகவி பாரதி , மக்கள்கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் ஏற்படுத்திய சமூகத் தாக்கங்கள், சுதந்திர தாகம், சமூகக் கண்ணோட்டம் பற்றி விளக்கிப் பேசினார்.
‘ செய் அல்லது செத்துமடி ‘ என்ற தலைப்பில் உரைநிகழ்த்திய பேராசிரியர் த.இராஜாராம் தனது உரையில் , இந்திய தேசத்தின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை, விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாக வாழ்க்கை ஆகியவற்றை விவரித்துப் பேசினார்.
நிகழ்வின் தொடக்கத்தில் மறைந்த கல்வெட்டறிஞர் புலவர் செ.இராசு திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டையும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 80 ஆம் ஆண்டையும் போற்றும் விதத்தில் மக்கள் சிந்தனைப் பேரவையின் மேடையில் எம்.பி.சீனிவாசன் சேர்ந்திசைக் குழுவினர் நிகழ்த்திய சேர்ந்திசைப் பாடல் நிகழ்ச்சி திரையில் ஒளிபரப்பப்பட்டது