தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலையை, ஊதியத்தை, வாழ்க்கையை பறிக்கும் ஒப்பந்த தொழிலாளர் முறையை கைவிட வேண்டும், தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடுநீர் வழங்கல் துறையின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும், 480 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரையும் சட்டப்படி நிரந்தரப்படுத்த வேண்டும், 2017 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்தை குறைத்து கடந்த 16.07.2023 அன்று வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளனம் (ஏஐடியுசி) முடிவிற்கிணங்க 19/7/2023 அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, ஈரோட்டில் வீரப்பன் சத்திரம் பேருந்து நிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவரும், ஏஐடியுசி மாநிலச் செயலாளருமான எஸ்.சின்னசாமி தலைமை வைத்தார். சங்கத்தின் துணைச் செயலாளர் ஆர்.ஞானசேகரன், துணைத்தலைவர் எஸ்.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏஐடியுசி மாவட்டத் துணைத் தலைவர் டி.ஏ.செல்வம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் எம்.குணசேகரன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், எம்எல்எப் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.காளியப்பன், எல்எல்எப் மாவட்டச் செயலாளர் பி.ஆனந்தன், சுய உதவிக்குழு பணியாளர் தொழிற்சங்க தலைவர் லெனின் கதிரவன், ஏஐடியுசி உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மணியன், ஈரோடு மாவட்ட வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.நரசிம்மன், தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்க தெற்கு மாவட்ட செயலாளர் எம்.பாபு உள்ளிட்டோர் உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்த கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு உயர்திரு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைைவர் அவர்கள் வழியாக கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது.