அரசின் இலவச வேட்டி சேலையில் ஜரிகை பார்டர் வைக்க திட்டமிடுவதால் இந்தாண்டும் உற்பத்தி செய்து முடிக்க தாமதமாகும் என விசைத்தறியாளர்கள் கொதித்துள்ளனர்.
வரும் பொங்கல் பண்டிகையின்போது ஏழை எளியோர் அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்க கைத்தறி மற்றும் துணி நுால் துறை மூலம் தலா 1.77 லட்சம் வேட்டி சேலை உற்பத்தி செய்ய அறிவித்தனர்.
கடந்த 2 ஆண்டாக செப். இறுதியில் நுால் வழங்கி உற்பத்தி பணி துவங்கி 60 சதவீதம் பேருக்கு கூட இலவச வேட்டி சேலை சென்றடையவில்லை. இப்புகாரால் இந்தாண்டு முன்னதாக அரசு திட்டமிட்டு கடந்த மாத இறுதி வாரத்தில் பல்வேறு ரக நுாலுக்கு டெண்டர் வைத்தனர். இந்நிலையில் வேட்டி சேலையில் ஜரிகை பார்டர் வைக்கலாம் என திட்டமிட்டு டெண்டரை இறுதி செய்யாமல் வைத்துள்ளனர்.
இதுபற்றி விசைத்தறியாளர் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
இந்தாண்டு ஜரிகை பார்டர் வைத்து அதை மட்டுமே பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
இதன் மூலம் பழைய ஸ்டாக் பதுக்கல் துணிகள் தடுக்கப்படும் என தற்போது முடிவு செய்துள்ளனர். இதற்காக கடந்த 30ல் வெளி மாநில ஜரிகை உற்பத்தியாளர்களை அழைத்து ஆலோசித்தனர். அரசு கூறும் குறைந்த விலைக்கு ஜரிகை வாங்கினால் இலவச வேட்டி சேலையில் இணைக்கும்போது அறுந்து உற்பத்தி தாமதமாகும். தவிர 1.77 கோடி வேட்டி 1.77 கோடி சேலைக்கு ஜரிகை வைத்து உற்பத்தி செய்ய இம்மாத இறுதிக்குள் நுால் மற்றும் ஜரிகை வழங்காவிட்டால் ஜன. இறுதி அல்லது பிப்.
மாதத்தில் கூட உற்பத்தியை முடிக்க முடியாத நிலை ஏற்படும்.தற்போதைய நிலையில் இத்திட்டத்துக்கு நிதித்துறை 487 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. ஜரிகை வாங்கி வேட்டி சேலை உற்பத்தி செய்தால் 600 கோடி ரூபாய் வரை செலவாகும் என நிதித்துறையிடம் தெரிவித்துள்ளனர். நிதித்துறை ஒப்புதல் வழங்கி அதன்பின் ஜரிகைக்கு ஆர்டர் வழங்கி இலவச வேட்டி சேலை உற்பத்தியை துவங்க கடந்தாண்டு போல செப். இறுதியாகிவிடும்.அதுவரை விசைத்தறிகளுக்கு வேலை கிடைக்காமல் செப்டம்பரில் உற்பத்திக்கு நுால் வழங்கினால் அடுத்தாண்டு மார்ச் வரை பணி நடக்கும் என்பதால் பயனாளிகளுக்கு வேட்டி சேலை கிடைக்காமல் அதிருப்தியே ஏற்படும். எனவே நடப்பாண்டில் முன்புபோல வேட்டி சேலையை உற்பத்தி செய்துவிட்டு வரும் ஆண்டில் ஜன. - பிப். மாதம் ஜரிகை மூலம் பார்டர் அமைக்க திட்டமிட்டு செயல்படுத்தினால் பாதிப்பு ஏற்படாது.