செல்போன்,மணி பிரஸ்
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு திண்டல் அருகே நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பல பேரின் செல்போன்கள், மணிபர்சுகள்,ஹேண்ட் பேக்குகள், தொண்டர்கள் செலவுக்கு வைத்திருந்த பணங்கள் ஆகியவைகள் திருடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொருட்களையும் பணங்களையும் இழந்த தொண்டர்களும், பெண்களும் பரிதாபத்துடன் காணப்பட்டனர் யாரிடம் செல்வது எப்படி சொல்வது என தெரியாமல் திருதிருவென மொழித்து நிகழ்ச்சி முடிந்ததும் நடையை கட்டினர்கள்.
கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது, “காமராஜரின் அரசியல் பயணம், தமிழகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சியை நோக்கியதாக இருந்தது. தற்போது வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற முழக்கத்துடன், கூட்டணி கட்சிகளான பாஜக, அதிமுகவுடன் பயணிக்கிறோம்.
காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெற்றது. இப்போது நடக்கும் ஆட்சியில் தொழில் கொள்ளை நடந்துகொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு முன்பு 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அமைச்சர்களை எளிதில் சந்திக்க முடிந்தது. அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட்டனர்.
மத்திய அரசோடு இணக்கமான செயல்பாடு இருந்தது. இப்போது நடைபெறும் திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்றவில்லை. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் மற்ற மாநிலங்களுக்கு சவால் விடும் வகையில் வெற்றிபெற்று வருகின்றனர். இதனை அரசு புரிந்துகொண்டு நீட் தேர்வு குறித்து பேச வேண்டும். மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதுதான் அரசின் கடமை. மாணவர்களின் அறிவுக்கூர்மையை வளர்க்காத அரசு தேவையில்லை. மகளிர்க்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என கூறினர். இரண்டரை ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில் பாகுபாடு காட்டி, பெண்களை அவமானப்படுத்துகின்றனர். 2 கோடி பெண்களுக்கும் மாதம் 1,000 ரூபாய் தர முடியாவிட்டால் அரசு ராஜினாமா செய்துவிட்டு போகலாம்.
காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளியை நிரபராதியாக்க செயல்படுகிறார்கள்.
எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் நிகழ்வுகளாக நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் பள்ளிகளில் கூட கட்டுப்படுத்த முடியாத அளவு போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது.
சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு டாஸ்மாக் தான் காரணம். டாஸ்மாக்கில் இருந்து விடுதலை கிடைத்தால் மட்டுமே, பெண்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும். எனவே வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவை அகற்ற மக்கள் உறுதி எடுக்க வேண்டும். அத்திக்கடவு- அவினாசி திட்டம் பாசனத்துக்கும், குடிநீருக்குமான திட்டம். அதை செயல்படுத்தாமல் தவிர்க்கின்றனர். முல்லைபெரியாறு பாலாறு, காவிரி ஆற்றில் நமது உரிமைகள் இழந்து வருகிறோம். கர்நாடகாவின் துணை முதல்வர், தமிழகத்துக்கு காவிரி நீர் தரமாட்டோம், காவிரியின் குறுக்கே அணை கட்டுவோம், என்கிறார். டெல்டா வரண்டால் தமிழகம் பாலைவனமாகும் என்பதை முதல்வர் உணரவில்லை. அரசியல், கூட்டணி காரணமாக தவறான முடிவை முதல்வர் எடுக்கிறார்.
கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா, மத்திய மாவட்ட தலைவர் பி.விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர், தெற்கு மாவட்ட தலைவர் வி.பி.சண்முகம், தேர்தல் பணிக்குழு உறுப்பினர் கௌதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.