75 கிலோ தரமில்லாத மாம்பழங்கள் பறிமுதல்....... _________________________
ஈரோட்டில் உள்ள சாலையோர பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 75 கிலோ தரமில்லாத மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோட்டில் சாலையோர பழக்கடைகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக காந்திஜிரோடு, சென்னிமலைரோடு, கரூர்ரோடு, காவிரிரோடு, பெருந்துறைரோடு, நசியனூர்ரோடு, சத்திரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த பழங்கள் இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதா? என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அதிகாரி தங்கவிக்னேஷ் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஈரோடு காந்திஜிரோடு, சென்னிமலைரோடு, கரூர்ரோடு ஆகிய இடங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மாம்பழம், வாழை உள்ளிட்ட பழங்களை அதிகாரிகள் கையில் எடுத்து பார்வையிட்டனர்.
இந்த சோதனையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களும், சாப்பிடுவதற்கு தரமில்லாத அழுகிய நிலையில் உள்ள பழங்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அழுகிய நிலையில் இருந்த 50 கிலோ மாம்பழங்களையும், செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 25 கிலோ மாம்பழங்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், 10 கடைக்காரர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கப்பட்டது. 3 கடைகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். எனவே தரமில்லாத பழங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.