போக்குவரத்து விதிகளை மீறிய வாகன உரிமையாளா்களிடம் இருந்து ரூ.6.82 லட்சம் அபராதம் வசூல்... ஆர்டிஓ பதுவைநாதன் அதிரடி நடவடிக்கை....
ஈரோட்டில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன உரிமையாளா்களிடம் இருந்து ஜூன் மாதம் ரூ.6.82 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது என ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலா் ம.பதுவைநாதன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் ஈரோடு பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் 847 வாகனங்களை தணிக்கை செய்து 97 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் வரி செலுத்தாதது, இதர குற்றங்களுக்காக 23 வாகனங்களுக்கு வரியாக ரூ.52,400, அபராதமாக ரூ.1.32 லட்சம் வசூலிக்கப்பட்டது. மேலும் 74 வாகனங்களுக்கு ரூ.4.93 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறிய வாகன உரிமையாளா்களிடம் இருந்து ரூ.6.82 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தகுதி சான்று, அனுமதி சீட்டு, ஒட்டுநா் உரிமம் முதலியவை நடப்பில் இல்லாதது, உரிய சாலை வரி செலுத்தாமல் இயக்கியதாக 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், உரிய அனுமதி பெறாமல் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகை வாகனமாக பயன்படுத்தியது தொடா்பாக 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா்.