ஈரோடு, ஜுலை 7-
41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க 8வது கோட்ட மாநாடு கோபியில் வியாழன், வெள்ளியன்று நடைபெற்றது. கோட்ட தலைவர் என்.முருகவேல் தலைமை வகித்தார். உட்கோட்ட தலைவர் மா.பழனிவேலு வரவேற்றார். மாநில தலைவர் எஸ்.செந்தில்நாதன் தொடக்க உரையாற்றினார். வேலை அறிக்கை, வரவு-செலவு சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தொகுப்புரை வழங்கப்பட்டது. மாநில தலைவர் மா.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.
புதிய நிர்வாகிகள்
41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும். சாலைப்பணியாளர்கள் தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதியம் ரூ.5200, தர ஊதியம் ரூ.20 ஆயிரம், ரூ.1900 வழங்க வேண்டும். இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்க வேண்டும்.
வெள்ளியன்று மாலை சாலைப்பணியாளர்களின் குடும்பத்துடன் பேரணி நடைபெற்றது. உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணியை அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் கே.பெருமாள் தொடங்கி வைத்தார். ஜீயான் தியேட்டர் அருகே பேரணி நிறைவடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன் தொடக்க உரையாற்றினார். மாநில துணை பொது செயலாளர் மு.சீனிவாசன் சிறப்புரையாற்றினார். மாநில பொது செயலாளர் ஆ.அம்சராஜ் நிறைவுரையாற்றினார். கோட்ட பொருளாளர் எஸ்.ஜெபமாலைராஜ் நன்றி கூறினார்.