திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று திடீரென 25 அடிக்கு கடல் உள்வாங்கியது. இதையடுத்து சங்கு, சிப்பி சேகரிப்பில் பக்தர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடினர். அப்போது பகலில் திடீரென கடல் உள்வாங்கியது. சுமார் 25 அடி தூரத்திற்கு உள்வாங்கிய போதும் எவ்வித பதற்றமும் இன்றி பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.
கடல் உள்வாங்கிய நிலையில் கடற்பாறைகள் வெளியே தெரிந்ததால் ஒரு சில பக்தர்கள், பாறைகளின் இடையே உள்ள சங்கு, சிப்பிகளை சேகரித்தனர். அதன்பிறகு சிறிது நேரத்தில் கடல் மீண்டும் இயல்பு நிலையை அடைந்தது. வழக்கமாக அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் கடல் உள்வாங்குவது வழக்கம். அதேபோல் நேற்றுமுன்தினம் பவுர்ணமியை முன்னிட்டு கடல் வாங்கியதாக பக்தர்கள் குறிப்பிட்டனர்.