ஈரோடு மாநகராட்சி பகுதியில்
பார்க் ரோடு, மூலபட்டறை குப்பைகாடு போன்ற பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட லாரி அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த லாரி மூலமாக வெளி மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள் உள்படஅத்தியாவசிய பொருள்கள் அனுப்பபட்டு வருகின்றன. இதில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.சுமார் 50 ஆண்டுகளாக இந்த நிறுவனங்களில் அவர்கள் சுமை தூக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஈரோடு கூட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசனுடன் அனைத்து தொழிற்சங்கம் நிர்வாகம் ஒப்பந்தம் செய்து மூன்றாண்டுக்கு ஒரு முறை ஒப்பந்தம் கையெழுத்தாகி கூலி கூலி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. கடைசியாக 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வழங்கிக் கொண்டிருக்கும் கூலியிலிருந்து 41 சதவீத கூலி உயர்வு மற்றும் இரவு எட்டு மணிக்கு மேல் லோடு ஏற்றுவதாக இருந்தால் இரவு சாப்பாடுக்கு 75 ரூபாய் வழங்குவதென்றும் முடிவு செய்யப்பட்டது மேலும் நிர்வாக தரப்பினர் தொழிலாளர் தரப்பினர் கையெழுத்திட்டு ஒப்பந்தம் தயார் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.ஆனால் அதன் பிறகு சொன்னபடி சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.
எனவே ஈரோடு கூட்ஸ் ட்ரான்ஸ்போர்ட் அசோசியேசினும் மற்றும் ரெகுலர் லாரி சர்வீஸ் நிறுவனங்களில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆயிரம் பேர் நேற்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தைதொடங்கியுள்ளனர்.
சுமை தூக்கும் தொழிலாளர்களின் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இன்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகே பார்க் ரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஈரோடு மாவட்ட அனைத்து சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
சுமை தூக்கும் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. ஈரோடு மாநகர பகுதியில் உள்ள மஞ்சள் குடோன் ஜவுளி குடோன்களில் பொருட்கள் அப்படியே தேங்கி இருக்கின்றன. இதனால் வெளி மாநில ஆர்டர் கொடுத்த வியாபாரிகள் தவித்து வருகின்றனர். உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.