ஈரோடு மாநகராட்சி - தூய்மைப் பணிகளை தனியாருக்கு காண்ட்ராக்ட் விடுவதைக் கைவிடக் கோருதல் மற்றும் டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யக் கோருதல்
ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன்,AITUC ஈரோடு மாவட்ட உள்ளாட்சித்துறை பணியாளர் சங்கம் சார்பில் இன்று (16-06-2023) நேரில் சமர்ப்பிக்கப்பட்ட முறையீடு!எஸ்.சின்னசாமி,தலைவர்.ஆர்.மணியன்.செயலாளர்., ஆர் யூ நேரில் மனு வழங்கினர் அதில் கூறியதாவது
1) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண்:116 நாள்:24-08-2022 மற்றும் அரசாணை எண்:152 நாள்: 20-10-2022
2) நகராட்சி நிர்வாக இயக்குநரின் செயல்முறைகள் Roc.No:35883/2022/EA1-SWM-1 நாள்:17-02-2023
3) ஈரோடு மாநகராட்சி ஏல அறிவிக்கை /ஏல ஆவணம் (DENDER DOCUMENT) TENDER NO: -H1-7219-2022
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பார்வை 1 மற்றும் 2-ல் காணும் அரசாணைகள் மூலமாக தமிழ்நாட்டிலுள்ள 20 மாநகராட்சிகளில் (சென்னை பெருநகர மாகராட்சி நீங்கலாக) திடக்கழிவு மேலாண்மை பணிகளை (தூய்மைப் பணிகளை) தனியாருக்கு விடுவதென தன்னிச்சையாக முடிவு செய்து அறிவித்துள்ளது.
இந்த அரசாணையில் 20 மாநகராட்சிகளிலும் சேர்த்து மொத்தம் 3417 நிரந்தரப் பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது; தூய்மைப் பணியாளர்கள், தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட சுமார் 30,000 நிரந்தரப் பணியிடங்கள் ஒழிக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் உள்ளது. எதிர்காலத்தில் இப்பணியிடங்கள் அவுட்சோர்சிங் முறையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மிகக்குறைந்த கூலியில் பல்லாண்டு காலமாக பணிபுரிந்துவரும் பல்லாயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சுகிறோம். மேலும், இது சமூக நீதிக்கே எதிரான நடவடிக்கையாகும்.
ஆகவே, தான் இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; இந்த அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் என ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் மாநில அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
இந்நிலையில் மேற்படி அரசாணைகளை செயல்படுத்தும் வகையில், ஈரோடு மாநகராட்சியில் தூய்மைப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க பார்வை 3-ல் காணும் டெண்டர் அறிவிப்பும், ஏல ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்தும், கைவிடக் கோரியும் ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் போராடி வருகிறோம். வேலைநிறுத்த அறிவிப்பும் கொடுத்துள்ளோம். மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் நேரிலும், தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு சமரசப் பேச்சு வார்த்தைகளின் போதும் இந்த அரசாணைகளை செயல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெரிவித்து, இதனை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளோம்.
பின்வரும் காரணங்களுக்காக ஈரோடு மாநகராட்சியில் மேற்படி அரசாணைகளை செயல்படுத்துவதையும், தூய்மைப்பணிகளை தனியாருக்கு காண்ட்ராக்ட் விடுவதையும் கடுமையாக ஆட்சேபிக்கிறோம்.
1) ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 172 நிரந்தரப் பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 1000-க்கும் மேற்பட்ட நிரந்தரப்பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், எதிர்காலத்தில் நிரந்தரம் செய்யப்படுவோம்; நிரந்தரத் தொழிலாளர்களுக்கான ஊதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மிகக் குறைந்த கூலியில் வேலைக்கு சேர்ந்து பல்லாண்டுகளாக பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் இம்முடிவு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆட்சியிலாவது விடியல் ஏற்படும் என்று நம்பிய தொழிலாளர்கள் வாழ்க்கை நிரந்தரமாக இருண்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
2) ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணியில் தற்போது 500-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களும், 1200-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். தனியாருக்கு ஒப்பந்தம் விடும்போது 858 தூய்மைப் பணியாளர்கள் தேவை என டெண்டர் ஆவணத்தில் (ஒரு இடத்தில் 802 பேர்) என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு தொழிலாளியின் வேலை இழப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
3) ஏல ஆவணத்தில் தொழிலாளர்கள் தகுதி வயது வரம்பு 21 முதல் 50 வரை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 60 வயது நிறைவடையும் வரை பணியாற்ற வேண்டிய தொழிலாளர்களின் வயது வரம்பை ஐம்பது வரை என தன்னிச்சையாக அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது சட்ட விரோதமானதாகும். ஆகவே, ஐம்பது வயதான மற்றும் எதிர்காலத்தில் 50 வயது நிறைைடையும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.
4) ஈரோடு மாநகராட்சியில் தற்போது 1948 ஆம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் நிர்ணயிக்கப்பட்ட 2022-2023 ஆம் ஆண்டுக்கான ஊதியமான நாளொன்றுக்கு ரூ.707/- ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமும் இதுவேயாகும். இதனை தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை ஆணையர் அறிவித்துள்ளபடி, 1-4-2023 முதல் நளொன்றுக்கு ரூ725/- ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென கோரி வருகிறோம். ஈரோடு, தொழிலாளர் துணை ஆணையரும் இதனை (நாளொன்றுக்கு ரூ.725/-) வழங்க வேண்டுமென மாநகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஏல ஆவணத்தில் ஒப்பந்ததாரர், தூய்மைை பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.532.35 ஊதியம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது PWD, TWAD மற்றும் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியம் இதில் எது குறைவோ அந்த ஊதியம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானதாகும். இதனை எக்காரணம் கொண்டும் ஏற்க இயலாது.
5) விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்தும், முத்தரப்பு அமைப்புகளில் விரிவாக விவாதித்தும் 1997 ஆம் ஆண்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு வேலை அளவுகள் தீர்மானிக்கப்பட்டு, அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம், நகர விரிவாக்கம் உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட அளவுகோள்கள் படி நிரந்தரப் பணியிடங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தற்போது நிரந்தரப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டிய அவசியமும், தேவையும் ஏற்பட்டுள்ளது. ஆனால், தற்போது அதிகாரிகளால் தன்னிச்சையாக, நடைமுறை சாத்தியமற்ற அளவுக்கு அதாவது இரண்டு, மூன்று மடங்கு அதிகமாக வேலை அளவுகள் உயர்த்தப்பட்டும், இதனால் பணியிடங்கள் குறைக்கப்பட்டும் உள்ளன.
6) ஈரோடு மாநகராட்சியில் தினசரி சேகரித்து, அப்புறப்படுத்தும் குப்பைகளின் அளவுக்கு ஏற்ப ஒப்பந்ததாரருக்கு தொகை வழங்கப்படும் எனவும், நிர்ணயிக்கப்பட்ட வேலையளவில் 90% அதிகமாக வேலை செய்தால் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.1000/- ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஏல ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் தற்போது நாளொன்றுக்கு சுமார் 257 மெட்ரிக் டன் குப்பைகள் உற்பத்தியாவதாகவும், இதில் ஒரு டன்னுக்கு ரூ3905.52 வீீதம் நாளொன்றுக்கு ரூ10.04 லட்சம், ஆண்டுக்கு ரூ.3664.6 லட்சம் மற்றும் GST தொகை 18% உட்பட ஆண்டுக்கு ரூ.4360.87 லட்சம் (சுமார் 43.61 கோடி) என்ற அடிப்படையில் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பீஸ் ரேட் முறை எதிர்காலத்தில் தொழிலாளர்கள் ஊதியத்திற்கும் கொண்டுவரும் அபாயம் உள்ளது.
7) தற்போதுள்ள சுய உதவிக்குழு முறையும் அவுட்சோர்சிங் தான். இதில் மாநகராட்சி வழங்கும் குறைந்தபட்ச ஊதியம் முழுமையாக தொழிலாளர்களை சென்றடைகிறது. PF மற்றும் ESI போன்ற சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கான பிடித்தங்கள் அந்தந்த அரசு அலுவலகங்களில் செலுத்தப்படுகின்றன. தனியாருக்கு ஒப்பந்தம் விடும்போது அதற்கான எந்த உத்தவாதமுமில்லை என்பதே நடைமுறை அனுபவமாக உள்ளது.
8) தனியாரிடம் தூய்மைப்பணிகளை ஒப்படைப்பதால் மாநகராட்சிக்கு செலவினங்கள் பெரிய அளவுக்கு குறைய வாய்ப்பில்லை. அதோடு பொது மக்களுக்கும் முழுமையான, சிறப்பான சேவைக்கு வாய்ப்புகள் குறைவாகும்.
ஆனால், தொழிலாளர்களுக்கோ வேலையிழப்புகள், ஊதிய இழப்புகள், அதீதமான வேலைப்பளு திணிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
கொரோனா போன்ற நோய்த்தொற்று காலங்களிலும், மழை, புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் பணியற்றியவர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆவர்.
ஆகவே, தாங்கள் மேற்கண்ட எமது கருத்துக்களை விரிவாகப் பரிசீலித்து, அரசுக்கு பரிந்துரை செய்து மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியாருக்கு காண்ட்ராக்ட் விடும் முடிவை கைவிடுமாறும், அதற்கான பார்வை 3-ல் காணும் ஏல (TENDER) அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.