ஈரோடு மாநகராட்சி தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்து, அதற்கான ஏல நடவடிக்கைகளை கைவிடக்கோரி தூய்மை பணியாளர்கள் கடந்த 8 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திவரும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணி ஊழியர்கள் சிஐடியு மாவட்ட தலைவர் சுப்ரமணியன், தலைமையில் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதில்,ஈரோடு மாநகராட்சியில், தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில், தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்ப பெறவேண்டும், இதற்காக நடைபெறவுள்ள டெண்டர் குறித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு 725 ரூபாயை ஏப்ரல் முதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோரிக்கை அட்டைகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி, எல்பிஎப் மாவட்ட செயலாளர் கோபால் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மாநகராட்சி பகுதியில் 8 நாட்களாக குப்பைகள் அள்ளும் பணிகள், சாக்கடை அள்ளும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளதுடன், சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதுஏற்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
உடனடியாக தூய்மை பணியாளர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.