ஈரோடு பெருந்துறை அருகே தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் தந்தையின் கண்முன்னே தனியார் நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தனியாா் நிறுவன மேலாளர் கோைவ அருகே உள்ள கோவைப்புதூர் வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 59). இவருடைய மகன் கார்த்திக் ராஜா (வயது 31). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் ரவிச்சந்திரனும், கார்த்திக் ராஜாவும் சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக கோவையில் இருந்து காரில் சென்று கொண்டிருந்தனர். அவினாசி அருகே வந்ததும் காரை நிறுத்திய கார்த்திக் ராஜா, தனக்கு தூக்கம் வருவதாகவும், அதனால் சிறிது நேரம் ஓய்வு எடுக்க விரும்புவதாகவும் தந்தையிடம் கூறினார். சாவு இதைத்தொடர்ந்து காரின் சாவியை தந்தை ரவிச்சந்திரனிடம், கார்த்திக் ராஜா வழங்கினார். இதையடுத்து காரை ரவிச்சந்திரன் ஓட்டினார். முன்புற சீட்டில் தந்தையின் அருகே கார்த்திக் ராஜா உட்கார்ந்திருந்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சரளை ஏரி கருப்பன் கோவில் அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல திருப்பியபோது எதிர்பாராத விதமாக ரோட்டின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் (சென்ட்ரல் மீடியன்) மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதியில் இடது புறத்தில் கார் நொறுங்கியது. இதில் முன்புறம் உட்கார்ந்து வந்த கார்த்திக் ராஜா படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். ஆனால் ரவிச்சந்திரன் காயமின்றி தப்பினார். உடனே ரவிச்சந்திரன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக கார்த்திக் ராஜா உயிரிழந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் தந்தை கண்முன்னே மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது