கருப்பன் யானையால் மீண்டும் நிம்மதியை இழந்த மக்கள்
ஈரோடு, மார்ச்.7-
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி,சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, மக்காச்சோளம், தென்னை போன்றவற்றை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வன சரத்துக்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற காட்டு யானை அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்ததுடன் தோட்டக்காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளான மல்லப்பா, திகினாரை ஜோரைகாடு பகுதியைச் சேர்ந்த மாதேவா ஆகியோரை மிதித்து கொன்றது.
இதனை அடுத்து கருப்பனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து 3 கும்கி யானைகள் தாளவாடி பகுதிக்கு வரவழைக்கப்பட்டதுடன், அவைகளின் உதவியுடன் அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஒரு வழியாக கருப்பன் இருக்கும் இடத்தை கண்டறிந்த வனத்துறையினர் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இருந்தாலும் வனத்துறைக்கு போக்கு காட்டிய கருப்பன் வனப்பகுதிக்குள் தப்பி சென்றது. இதனால் கருப்பன் யானையை பிடிக்கும் முயற்சியை தற்காலிகமாக வனத்துறையினர் நிறுத்தி வைத்தனர். கடந்த சில நாட்களாக கருப்பன் யானை நடமாட்டம் இல்லாமல் இருந்தது இதனால் விவசாயிகள் நிம்மதியாக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்த தேவா என்பவர் தோட்டத்துக்குள் புகுந்தது. இதை கண்டதும் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு கருப்பன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு முழுவதும் போக்கு கட்டிய கருப்பன் யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. மீண்டும் கருப்பன் யானை ஊருக்குள் வந்ததால் நிம்மதியை இழந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். இனி எப்போது கருப்பன் மீண்டும் ஊருக்குள் வருமோ என்ற அச்சத்தில் மக்கள் தவிக்கின்றனர். எனவே மீண்டும் கருப்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.