Type Here to Get Search Results !

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து ஈரோடு மாவட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.பட்ஜெட்

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் குறித்து ஈரோடு மாவட்ட பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.பட்ஜெட்
தமிழ்நாடு அரசின் 2023-2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நேற்று சட்டப்பரவையில் தமிழக நிதி அமைச்சர்பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும், வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பட்ஜெட் குறித்த தங்கள் கருத்தை பதிவு செய்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

வேளாண்பட்டதாரிகள் ஆலோசனை மற்றும் சேவை மையத்தின் துணைத்தலைவர் என்.சிவநேசன்:-

தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள இந்த பட்ஜெட் கல்வி, மருத்துவம் மற்றும் மாநிலத்தின் உள்கட்டமைப்பை முன்னெடுத்துச்செல்லும் பட்ஜெட்டாக உள்ளது. பெண்களின் தொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பினை அளிக்கிறது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதை பெறுவதற்கான தகுதி என்ன என்று அறுதியிட்டுக்கூறப்படவில்லை.

பத்திரபதிவுக்கு 4 சதவீதம் கட்டணம் என்பது 2 சதவீதமாக குறைத்து இருப்பது வரவேற்கத்தக்கது. ஈரோட்டில் அரசு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது வேலைவாய்ப்பினை உருவாக்கும். தந்தை பெரியார் வனவிலங்குகள் சரணாலயம் அமைப்பது சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக அமையும்.
கோரிக்கைகள்
ஈரோடு மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ள பொது சுத்திகரிப்புநிலையம் தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமாகும். ஜவுளி தொழிலின் தலைநகரமாக இருக்கும் ஈரோட்டில் ஒரு ஜவுளிபூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு இல்லை. பருத்தி வங்கி, நூல் வங்கிகள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் பட்ஜெட்டில் இல்லை. சிறு-குறு தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டு உள்ள தொகை போதுமானதாக இல்லை. மானியங்கள் தொடர்பான தகவலும் இல்லை. சூரியசக்தி மின்சாரம், காற்றாலை மின் உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு மானியம், குறைந்த வட்டியில் கடன் போன்ற கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை. கூவம் ஆறு தூய்மை பணி வரவேற்கக்தக்கது. அதே நேரம் காவரி ஆற்றில் ஈரோடு-ஜேடர்பாளையம் நீர்வழி போக்குவரத்து திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. கோவை, மதுரை மெட்ரோ ரெயில்திட்டங்கள்வரவேற்கத்தக்கவை.மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜெயராமன்:-

கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் அறிவித்து இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது. குறிப்பாக நலத்துறை பள்ளிக்கூடங்கள், அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்-ஆசிரியைகளுக்கு ஊதியம் உள்பட பல்வேறு வேறுபாடுகள் இருந்தன. தற்போது அனைத்து துறை பள்ளிக்கூடங்களையும் கல்வித்துறையின் கீழ் ஒருங்கிணைத்து இருப்பதன் மூலும் வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் சமன் செய்யப்பட்டுள்ளது. இது நலத்துறை பள்ளிக்கூடங்களில் பணிசெய்து வரும் ஆசிரிய-ஆசிரியைகளுக்கு வரப்பிரசாதமான அறிவிப்பாகும்.

காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதன் மூலம் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் பள்ளிக்கூடங்கள் மேம்பாடு அடையும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி வளர்ச்சி திட்டத்தில் கட்டிடங்கள் மட்டுமின்றி உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டியது அவசியம். அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் நான் முதல்வன் திட்டம் செயல்படுத்த இருப்பது வரவேற்க தக்கது.

உயர் கல்வி

கல்லூரி செல்லும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை திட்டம் நீட்டிப்பு செய்து இருப்பதன் மூலம் ஏராளமான மாணவிகள் உயர்கல்விக்கு செல்வார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான திறன் பயிற்சி திட்டம் வருங்காலத்தில் மாணவ-மாணவிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு தயாராகும் போட்டியாளர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரித்து இருப்பதும் வரவேற்க தக்கது. எண்ணும் எழுத்தும் திட்டம் 5-ம் வகுப்புவரை நீட்டித்து இருப்பதையும் வரவேற்கலாம்.

அதே நேரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நீண்டநாள்கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல் என்பதையும் தமிழக அரசு விரைவாக அறிவிக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

ரியல் எஸ்டேட்

ஈரோடு வக்கீல் சி.எம்.ராஜேந்திரன்:-

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அனைவரும் எதிர்பார்த்த திட்டம். மேலும் பத்திரப்பதிவு கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பது, வீடு, வீட்டு மனை வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

அண்ணல் அம்பேத்கார் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் தமிழாக்கம் செய்யப்படும் என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது. உயிர்த்தியாகம் செய்யும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு கருணைத்தொகை உயர்த்தி இருப்பது ராணுவ வீரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் மரியாதையை காட்டுகிறது.

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான துணை திட்டங்களை அமல்படுத்த சிறப்பு சட்டம் இயற்ற குழு அமைத்து இருப்பது வரவேற்புக்கு உரியது. நிலத்தின் சந்தை மதிப்பு உயர்வு செய்வதற்கான குழு அமைப்பதும் நல்ல அறிவிப்பாகும். ஒரு லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் அளிக்கும் திட்டம் ஏழை முதியவர்களை பாதுகாக்கும் அறிவிப்பாகும். தமிழக பட்ஜெட் மக்கள் விரும்பும் பட்ஜெட்டாக அமைந்து உள்ளது.


பெருந்துறையை அடுத்துள்ள சீனாபுரத்தில் டீக்கடை நடத்தி வரும், பெரிய வீரசங்கிலியை சேர்ந்த குடும்பத் தலைவி சத்யா:-

சட்டமன்ற பொது தேர்தலின் போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அது செப்டம்பர் 15-ந் தேதி முதல் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தது எங்களைப் போன்ற வருமானம் குறைந்த குடும்ப பெண்களுக்க மிகப்பெரிய வரப்பிரசாதம். கடந்த 6 ஆண்டுகளாக நான் நடத்ி வரும் இந்த டீக்கடை தொழிலில் தினசரி வருமானம் என்று பார்த்தால் ரூ.500 கூடத் தேராது. எங்களது நிலை இப்படி இருக்கும்போது மாதந்தோறும் தமிழக அரசு தரும் 1000 ரூபாய் ஒரு வெகுமதியாகவே இருக்கும். எனக்கும் இந்த 1000 ரூபாய் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நான் காத்திருக்கிறேன்.

 *ஏமாற்றம் அளிக்கிறது* 

சென்னிமலையில் இரும்பு கடை நடத்தி வரும் ஏ.சுதா:-
குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம் ரூ.1,000 அறிவிப்பு, கிராம பகுதிகளில் ரூ.800 கோடி செலவில் குளங்கள் புதுப்பித்தல், கிராமப்புற சாலைகள் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் மேம்படுத்துதல் மற்றும் சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் போன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரவேற்கத்தக்கது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் முக்கிய தொழிலாக விளங்கும் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களின் அடிப்படை வாழ்க்கை தரம் உயர்வதற்கான அறிவிப்புகள் பெரிதாக இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.