ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே தயிர்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலம் (56) விவசாயி. இவர் தனது வீட்டின் அருகில் ஆட்டுப்பட்டி அமைத்து 50 ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று இரவு ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பிறகு இன்று அதிகாலை ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் உடனடியாக பட்டிக்கு சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் 8 ஆடுகள், 3 ஆட்டு குட்டிகளும் இறந்து கிடந்தன, அதைப்பார்த்து விவசாயி வெங்கடாஜலம் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் 10 மேற்பட்ட ஆடுகள் கடிபட்ட நிலையில் படுகாயத்துடன் காணப்பட்டன.இச்சம்பவம் குறித்து சித்தோடு கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கால்நடை மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் சென்று படுகாயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர், மர்ம விலங்கு ஒன்று பட்டிக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடி உள்ளது தெரிய வந்தது. சம்பவம் குறித்து காவல்துறையினரும், வனத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இப்பகுதியில் ஆடுகள் மர்ம விலங்கால் கடிபட்டு பலியாகியிருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் அரசு இதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், ஆடுகளை வேட்டையாடி வரும் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.