ஈரோட்டில் கடந்த 9-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன், விசைத்தறியாளர்களைச் சந்தித்து பேசி, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, கடந்த 10-ம் தேதி முத்துசாமி, எ.வ.வேலு, காந்தி உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் விசைத்தறியாளர்களைச் சந்தித்து பல்வேறு உறுதிமொழிகளை அளித்துள்ளனர்.
இதில், விசைத்தறியாளர்களுக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையில், ரூ.99 கோடியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையில் நெசவாளர்களுக்கு சேர வேண்டிய ரூ.60 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை உற்பத்தி முழுமையாக விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் என்ற உறுதியும் அமைச்சர்களால் அளிக்கப்பட்டுள்ளது.
ஜவுளித் தொழிலை சார்ந்த சாயப்பட்டறை, பதப்படுத்துதல் போன்ற தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை போக்குதல், கடன் வழங்குதல், கிளஸ்டர் ஏற்படுத்த நிலம், மஞ்சப்பை தயாரிப்பு என பல கோரிக்கைகள் விசைத்தறியாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில், விசைத்தறியாளர்களின் வாக்குகளை வளைக்க முதல்வரின் மருமகன் சபரீசனின் வகுத்த ‘வியூகம்’ வாக்குகளாக மாறுமா அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பலன் கிடைக்குமா என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.