Type Here to Get Search Results !

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தைகள் விதிமுறை குறித்துமாவட்டத் தேர்தல் அதிகாரி அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் நடத்தைகள் விதிமுறை குறித்துமாவட்டத்  தேர்தல் அதிகாரி அனைத்து கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை
ஈரோடு, ஜன.23 -
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 -ந் தேதி நடைபெறுவதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இந்நிலையில் இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரும், மாவட்டத் தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார், டி.ஆர்.ஓ. சந்தோஷினி சந்திரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க, தி.மு.க. பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், கட்சி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசியல் கட்சியினருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். அவர்கள் சந்தேகங்களுக்கு தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி தெளிவாக விளக்கம் அளித்தார்.
பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலில் உள்ளது. அரசியல் கட்சியினருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களும் தெளிவுபடுத்தப்பட்டது. இதுவரை பறக்கும் படை மூலம் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் என்ன வலியுறுத்தியுள்ளதோ அதை நாங்கள் பின்பற்றி வருகிறோம். கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் கூடுதல் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். கடந்த முறை கணக்கெடுப்பு படி 20 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை மாறிக்கொண்டே இருக்கும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். பதற்றமான வாக்கு சாவடிகளில் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும். தற்போது பதட்டமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இறுதியில் எத்தனை வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்று கண்டறியப்படுகிறதோ அதற்கு ஏற்ப துணை ராணுவத்தினர் வருவார்கள். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்கள் கையில் வைத்து இருக்க வேண்டும். இல்லையென்றால் பறிமுதல் செய்யப்படும். கிழக்கு தொகுதிகள் ஜவுளி வியாபாரிகள் அதிக அளவில் உள்ளனர். அவர்களுக்கு தனியாக கூட்டம் நடத்தி தேர்தல் நடத்தை விதிமுறை குறித்து தெளிவாக விளக்கி கூறப்படும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.