ஈரோடு, பெருந்துறை தாலுகா, காஞ்சிகோவிலை அடுத்த வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (25). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் கடந்த 4-ஆம் தேதி இரவு முதல் மாயமானார். மோட்டார் பைக்கில் வெளியே சென்ற பூபதி மீண்டும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காஞ்சிகோவில் போலீஸில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் பூபதியைத் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை காஞ்சிகோவிலில் இருந்து சித்தோடு செல்லும் வழியில் உள்ள கரட்டுப்பாளையம் பகுதியில் கீழ்பவானி கிளை வாய்க்கால் பகுதியில் வாலிபர் ஒருவர் உடலில் படுகாயங்களுடன் பிணமாகக் கிடப்பதாக காஞ்சிகோவில் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்து போனவர் மாயமான பூபதி என்பதும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக் பூபதியுடையது என்பதும் தெரிய வந்தது.
பூபதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். பூபதியின் வாகனத்தையும் போலீஸார் மீட்டு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து காஞ்சிகோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூபதியின் உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதால் அவரை யாராவது கடுமையாக தாக்கி, கொலை செய்து வீசிச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.
*கடந்த ஆண்டு பெருந்துறை அருகே சிறுமியைக் காதலித்ததாக பூபதி, போக்சோ சட்டத்தின்கீழ் கைது* செய்து சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த பூபதி தற்போது கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை விடுவிப்பதற்கான முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருவதாகக் கூறி நேற்று இரவு காஞ்சிகோவில் காவல் நிலையத்தை பூபதியின் உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
பூபதியின் தங்கை அனிதா நம்மிடம் கூறியதாவது,
ஒரு ஆண்டுக்கு முன்பு வரையிலும் பெருந்துறை அருகே தான் குடியிருந்தோம். அப்போது, பக்கத்தில் இருந்த சிறுமி, எனது தம்பியை காதலிப்பதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறி என் தம்பியை தேடி வந்து விட்டார். வேறு வழியின்றி அந்தச் சிறுமியை அழைத்துக் கொண்டு பூபதி வெளியூர் சென்று விட்டான். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் தேடிக்கண்டு பிடித்து அவர்கள் இருவரையும் அழைத்து வந்து என் தம்பி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கோவை சிறைக்கு அனுப்பி விட்டார்கள்.
இந்நிலையில் பூபதி ஜாமீனில் வெளியே வந்து விட்டான். ஒருமுறை நானும், பூபதியும் கடைக்குச் சென்றபோது, மோட்டார் பைக்கில் வந்த சிறுமியின் அண்ணன் விக்னேஷ், என் தம்பியைப் பார்த்து உன்னையெல்லாம் யாருடா ஜெயிலில் இருந்து வெளியே விட்டது என்று கெட்ட வார்த்தை சொல்லி திட்டினார்.
ஏற்கெனவே என் தம்பி ஜாமீனில் வந்துள்ளதால் எந்தப் பிரச்னைக்கும் போகக் கூடாது என்று எங்கள் வழக்கறிஞர் அறிவுறுத்தியிருந்தார். அதனால் நாங்கள் எதுவும் பேசாமல் வந்து விட்டோம்.
இந்த நிலையில், அடிக்கடி என் தம்பியை பார்ப்பதாகக் கூறி அந்தச் சிறுமியை அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கிறார்கள் என்பதால் அந்த ஊரில் இருந்து சில கி.மீ. தூரம் தள்ளி வெள்ளியங்காடு பகுதிக்கு எங்கள் வீட்டை மாற்றிக் கொண்டு வந்து விட்டோம். கடந்த ஒரு ஆண்டாக எந்த பிரச்னையும் வரவில்லை. இந்த நிலையில் தான் என் தம்பியை அடித்து, துன்புறுத்தி கொலை செய்துள்ளார்கள்.
என் தம்பியை கொன்றவர்களை கண்டறிந்து நேர்மையான முறையில் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நேற்று இரவு காஞ்சிகோவில் காவல் நிலையத்தை பூபதியின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக ஏ.எஸ்.பி. (பொறுப்பு) பவித்ரா உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் விக்னேஷ், பரமசிவம் ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று நள்ளிரவில் கைது செய்தனர்.
இந்த கொலையில் மேலும் ஒருவருக்கு தொடர்பிருப்பதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.