ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெறுவோம்
ஈரோடு, ஜன.28 -
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா ஏன் உலகில் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்களும் இந்த இடை தேர்தலை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். எம்ஜிஆர் தலைமையில் திண்டுக்கல்லில் நடந்த இடை தேர்தலில் வெற்றி பெற்றது போன்று இந்த தேர்தலிலும் எடப்பாடி தலைமையில் நாம் வெற்றி பெறுவோம். இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கி காட்டும். அ.தி.மு.க. கூட்டணியில் யார்?யார் ? இருக்கிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி இன்றும் 3 நாட்களில் அறிவிப்பார். 98.5 சதவீத பேர் ஒரே அணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுகிறோம். இந்த தேர்தலில் சரித்திர வெற்றி பெறுவோம். இதனை நம்பி நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறோம். எங்களது வேகம், விவேகம் மக்களை சந்திக்கும் விதம் போக போக உங்களுக்கே தெரியும். இன்று முதல் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பெயரில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறோம் மனநிலை குறித்தும் தெரிந்து வருகிறோம். இஸ்லாமியர்களுக்கு அதிமுக பல்வேறு திட்டங்களை செய்துள்ளது. ஹஜ் புனித யாத்திரைக்கு செல்லும் இஸ்லாமியர்களுக்கு கூடுதல் மானியம், ரம்ஜான் நோன்புகளுக்கு கஞ்சிக்காக அரிசி வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி உங்களுக்கு ஆதரவு அளிக்குமா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் என்றார். இதைப்போல் இரட்டை இலை சின்னம் உங்களுக்கு கிடைக்குமா என்ற கேள்விக்கும் கேள்விக்கும் பொருத்திருந்து பாருங்கள் என்றார்.