ஈரோடு கிழக்கு சட்டமன்ற திருமகன் ஈவெராவின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
உடல்நலக்குறைவால் காலமான ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கார் மூலமாக ஈரோடு வந்தார். திருமகன் ஈவெரா உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈவிகேஸ் இளங்கோவனுக்கு ஆறுதல் தெரிவித்தார். அவருடன், அமைச்சர்கள் முத்துசாமி, நேரு, செந்தில் பாலாஜி, காந்தி, உதயநிதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்பி கனிமொழி உள்ளிட்டோரும் திருமகன் ஈவெரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ராகுல் ஆறுதல்
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தொலைபேசி மூலம் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
முன்னதாக, ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி, எஸ்பி சசிமோகன், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு, தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா, எஸ்.டி. சந்திரசேகர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், காங்கிரஸ் சட்டப்பேரவைக்குழு தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மறைந்த திருமகன் ஈவெரா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.