நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கே ஆபத்து - காங்கிரஸ்
"இந்திய நிதிச் சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய இரண்டுமே அதானி குழுமத்தில் ஏராளமான முதலீடுகளை செய்துள்ளன. இதனால், அதானி குழுமத்திற்கு எழுந்துள்ள நெருக்கடி நாட்டின் ஒட்டுமொத்த நிதி ஸ்திரத்தன்மையிலும், அந்த பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது," என்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் குறித்த ஆய்வறிக்கை குறித்து ஒரு அரசியல் கட்சி வினைபுரிய தேவையில்லைதான். ஆனால், அதானி குழுமம் ஒன்றும் சாதாரண நிறுவனம் அல்ல. பிரதமர் நரேந்திர மோதி, குஜராத் முதலமைச்சராக பதவி வகித்த போதே அவருக்கு நெருக்கமானவராக அறியப்படும் கௌதம் அதானியுடையது. ஆகவே, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி விசாரிக்க வேண்டும்," என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ.யில் மக்களின் சேமிப்புப் பணம் என்னவாகும்?
"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் உண்மையானால், அது எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகியவற்றில் தங்களது வாழ்நாள் சேமிப்பை வைத்துள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சிதைத்துவிடும்," என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு பிரதமர் மோடி கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டும். இதுகுறித்து முழுமையாக விசாரணை அவசியம்," என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
எஸ்.பி.ஐ. வங்கி என்ன சொல்கிறது?
அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகள் குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் எஸ்.பி.ஐ. தலைவர் தினேஷ்குமார் காரா விளக்கம் அளித்துள்ளார். "அதானி குழுமத்தில் எஸ்.பி.ஐ. முதலீடு ஒன்றும் அச்சப்படத்தக்க அளவுக்கு இல்லை. ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள அளவுக்கும் குறைவாகவே முதலீடு செய்துள்ளோம். அதனால், இப்போதைய நிலையில் எங்களுக்கு எந்தவொரு கவலையும் இல்லை." என்று அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "அண்மைக் காலத்தில் அதானி குழுமத்தில் எஸ்.பி.ஐ. வங்கி முதலீடு ஏதும் செய்யவில்லை. இனி வருங்காலத்தில் அதானி குழுமத்தில் இருந்து முதலீட்டிற்கான வேண்டுகோள் ஏதும் வந்தால், விவேகத்துடன் அதனை அணுகுவோம்," என்று தெரிவித்துள்ளார்.
எல்.ஐ.சி.யோ, பங்குச்சந்தையின் தற்போதைய நிகழ்வுகளை பொருட்படுத்தாமல் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் மீண்டும் 300 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பதன் மூலம் மவுனமாக தனது பதிலை தெரியப்படுத்தியிருப்பதாகவே பொருள் கொள்ளலாம் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
பங்குச்சந்தை நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
இதுகுறித்து பங்குச்சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பனிடம் பேசிய போது, "எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய நிறுவனங்கள் அளவில் மிகப்பெரியவை. அத்துடன் ஒப்பிடுகையில், அதானி குழுமத்தில் அவற்றின் முதலீடு என்பது மிகச் சிறிய அளவுதான். மேலும், ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள அளவுக்கு மேல் அதானி குழுமத்தில் அவற்றால் முதலீடு செய்திருக்கவே முடியாது. பங்குச்சந்தையின் தற்போதைய நிகழ்வுகளால் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் ஒருவேளை நஷ்டத்தை சந்தித்தாலும், அவை அந்நிறுவனங்களை பெரிய அளவில் பாதிக்காது. ஆகவே, எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. நிறுவனங்களின் ஸ்திரத்தன்மை குறித்த கேள்விக்கே இடமில்லை," என்றார். அதானி குழுமத்தின் எதிர்காலம் என்னவாகும்?"அதானி குழுமம் தன் சந்தை மூலதன மதிப்பை மிகை மதிப்பீடு செய்தது, செயற்கையாக மதிப்பை உயர்த்திக் காட்டியது என்பதே அதன் மீது ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு. நிறுவனம் குறித்த மிகை மதிப்பீடு என்பது கடந்த காலத்திலும் இருந்தே வந்துள்ளது. லஞ்சம் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்படவில்லை
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை சுட்டுவது உண்மையோ, பொய்யோ எதுவாக இருந்தாலும், தற்போதைய நிலையில் அதானி குழுமத்தை சந்தேக மேகங்கள் சூழ்ந்திருப்பதால், அதில் முதலீடு செய்ய பெரு முதலீட்டாளர்களிடையே தயக்கம் நிலவுகிறது.