ஈரோடு, ஜன.28 -
விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம் புதுநகர் , மாசியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகவேல் (48).கரும்பு வெட்டும் தொழிலாளி. வேலை சம்மந்தமாக முருகவேல் ஒவ்வொரு ஊராக சென்று வருவது வழக்கம். அதன்படி தற்போது முருகவேல் ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மாரங்காட்டூர், சிலுவம்பாளையம்பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் தங்கி கரும்பு வெட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தார். அங்குள்ள மோட்டார் கொட்டகையில் இரவில் முருகவேல் தூங்குவது வழக்கம். அதேபோல் சம்பவத்தொன்றும் இரவில் கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென முருகவேல் வலது கையில் பாம்பு ஒன்று கடித்து விட்டது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் உள்ளவர்கள் முருகவேலை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு தீவிர சிகிச்சை பெற இருந்த முருகவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.