ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா
ஈரோடு, ஜன. 2 -
ஈரோடு கோட்டை பகுதியில் உள்ள கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வைகுந்த ஏகாதசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து உற்சவத்துடன் கடந்த 23ம் தேதி தொடங்கியது. இதனையொட்டி உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மூலவர் கருவறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்றுடன் பகல் பத்து உற்சவம் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை கஸ்தூரி அரங்கநாதர் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடந்தது. இதற்காக அதிகாலை 3 மணியளவில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம் திருமஞ்சனம், மகா தீபராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து இன்று அதிகாலை சரியாக 4.45 மணியளவில் பரமபத வாசல் வழியாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதர் முன் செல்ல பக்தர்கள் பின் தொடா்ந்து சென்றனர். அப்போது கூடி இருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என எழுப்பிய சத்தம் விண்ணை பிளக்கும் அளவில் இருந்தது. மக்கள் நெருசலின்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவிலை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்று காலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.போலீசார் மட்டும் அல்லாது ஊர்காவல் படையை சேர்ந்த ஆண்கள், பெண்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சொர்க்கவாசல் திறப்பு விழாவை ஒட்டி கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை வைத்திருந்தனர். வாகனங்கள் மாற்று வழி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியுடன் திருவீதி உலா நடைபெற்றது. ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க், காமராஜர் வீதி வழியாக மீண்டும் கோவிலில் வந்து நிறைவடைந்தது.
இதையடுத்து இன்று இரவு முதல் ஜனவரி 11ம் தேதி வரை ராப்பத்து உற்சவம், முத்தங்கி சேவை நடைபெற உள்ளது. 11ம் தேதி இரவு 7 மணிக்கு நம்மாழ்வார் மோட்சம் அடையும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னாள் எம்எல்ஏ கே எஸ் தென்னரசு, திமுக கவுன்சிலர் பழனியப்பா செந்தில்குமார், செயல் அலுவலர் கயல்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.