Type Here to Get Search Results !

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பணிமனையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மத சார்பற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஈரோட்டில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. அமைச்சர்கள் முத்துசாமி, ஏ.வ.வேலு, செந்தில் பாலாஜி மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் முத்துசாமி பேசியதாவது:-‌ ஈரோட்டில் நாங்கள் ஐந்து நாட்களாக வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். மக்கள் துக்கம் கலந்த வரவேற்பு அளித்தார்கள். திருமகன் ஈ.வெ.ரா. இழப்பை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒன்றரை ஆண்டுகளில் திருமகன் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். திருமகன் இறப்பு செய்தியை கேட்டதும் முதல்வர் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஈரோடு கிளம்பி வந்து இறுதி மரியாதை செலுத்தினார். திருமகன் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து அவர் தங்கி இருந்த கச்சேரி வீதிக்கு திருமகன் ஈ.வெ.ரா. வீதி என பெயர் மாற்றினார். இளங்கோவன் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளராக உள்ளார். திருமகன் இந்த தொகுதியில் என்னென்ன செய்ய நினைத்தாரோ அதனை கண்டிப்பாக இளங்கோவன் செய்து காட்டுவார். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் ஏ.வ.வேலு பேசியதாவது:- இடைத்தேர்தல் என்றால் முன்பு ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே போட்டி வலுவாக இருக்கும். தற்போது நிலை மாறிவிட்டது. இளங்கோவனும் நானும் ஒரே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறோம். இளங்கோவனுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே உள்ள உறவை பிரிக்க முடியாது. இளங்கோவனை பல ஆயிரக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:- நான் வேட்பாளர் என்றாலும் கூட உண்மையான வேட்பாளர் முதல் -அமைச்சர் மற்றும் அமைச்சர் முத்துசாமி தான். என் மகன் செய்த பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் போட்டியிட ஒத்துக் கொண்டேன். என் மகன் இந்த தொகுதி வளர்ச்சிக்காக கடந்த ஒன்றரை வருடமாக கடுமையாக உழைத்து உள்ளார். என் மகனுக்கு அமைச்சர்கள் அனைவரும் உறுதுணையாக இருந்தனர். இந்த முறை தேர்தலில் இந்த தொகுதியில் அமைச்சர் முத்துசாமி போட்டியிடுவதாக இருந்தது. நான் அமைச்சர் முத்து சாமியிடம் என் மகனுக்காக தொகுதியை கேட்டவுடன் அவர் சிறிதும் யோசிக்காமல் இந்த தொகுதியை விட்டுக் கொடுத்தார். இந்த மனது யாருக்கும் வராது. போர் வீரராக இருந்து தமிழகத்தை நமது முதலமைச்சர் காத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார். இதனைத் தொடர்ந்து திருமகன் ஈ.வெ.ரா. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, அந்தியூர் செல்வராஜ், தி.மு.க. மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.பி. சச்சிதானந்தம், தி.மு.க. மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பிரகாஷ், ஈரோடு மாநகர் தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் செந்தில்குமார், ஈரோடு மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் சரவணன், ஈரோடு மாநகர் பகுதி தி.மு.க .செயலாளர் அக்னி சந்துரு, ராமச்சந்திரன், நடராஜன், கவுன்சிலர் ரவி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.