ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 27-ந்தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கோவிலின் முன்பு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த கம்பத்துக்கு தினந்தோறும் பெண்கள் புனிதநீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று இரவு பெண்கள் முளைப்பாரி எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அப்போது அம்மன் வீதி உலா வந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பிளாக்ரோஸ் நண்பர்கள் மற்றும் கலைவாணர் வீதி பொதுமக்கள் செய்திருந்தனர். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், வருகிற 4-ந் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. 5-ந் தேதி காலை 7 மணிக்கு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. 6-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.