பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க கேட்டு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு தொகுப்பு வழங்க கோரி சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஈரோடு நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்டுமான நலவாரியத்தில் ஆலோசிக்காமல், தொழிற்சங்கங்களின் கருத்தையும் கேட்காமல் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை ஆய்வு செய்ய கூடாது. ஓய்வூதியம் பெற வாரிய உறுப்பினர், வயது தவிர வேறு நிபந்தனைகளை விதிக்க கூடாது. பொங்கலுக்கு கடந்த ஆட்சியில் வழங்கியது போல ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாக உயர்த்த வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வாரியத்தில் சலுகை, உதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் உடனடியாக பணப்பயன்களை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளரும், சங்கத்தின் மாவட்ட தலைவருமான எச்.ஸ்ரீராம் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் டி.குமார் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், சங்க மாவட்ட செயலாளர் எஸ்.மாதவன், பொருளாளர் கே.பழனிசாமி உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.