ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று பிச்சை எடுக்கும் போராட்டம்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல சங்கத்தின் செயலாளர் பாரதி தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து சொத்து, விட்டு வரி உயர்வை கண்டித்தும், குப்பைக்கு வரி விதிக்கப்பட்டதை கண்டித்தும் மனுக்களுடன் கையில் தட்டுடன் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. நிர்வாகிகள் கையில் குப்பைக்கு வரி விதிக்காதே, சொத்து வரி வீட்டு வரி உயர்த்தாதே போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர். பின்னர் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி தட்டுடன் மனு கொடுக்க அனுமதி இல்லை எனவே மனு மட்டும் கொண்டு செல்லுங்கள் என்று கூறினர். இதனை அடுத்து நிர்வாகிகள் மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
வீட்டு வரி, சொத்து வரி உயர்வை பாதியாக குறைத்திட வேண்டும். 10 ஆண்டுகளுக்குள் கட்டப்பட்டு வரி விதிப்புகளுக்கு வரி உயர்வில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். குப்பை வரியை அறவே நீக்க வேண்டும். பாதாள சாக்கடை வைப்புத்தொகை சேவை மாதாந்திர கட்டணங்களை உயர்த்தியதை கைவிட வேண்டும். சொத்துவரி சீராய்வு சிறப்பு விசேஷ நோட்டீஸ் அனைவருக்கும் முழுமையாக வழங்காமலேயே கெடுபிடி மிரட்டல் விடுக்கும் மாநகராட்சி நிர்வாகம் அதனை நிறுத்த வேண்டும்.