ஈரோட்டில் வரும் 8ல் பாரம்பரிய காங்கேயம் கால்நடை கண்காட்சி
ஈரோடு மாவட்டம், பெருந்துறை சாலை, ஏ.இ.டி., பள்ளி வளாகத்தில் வரும், 8 காலை, 9:00 முதல் மாலை 5:00 மணி வரை பாரம்பரிய காங்கேயம் கால்நடை கண்காட்சி நடக்க உள்ளது.இதுகுறித்து, ஈரோடு நாட்டு மாடு பாதுகாப்பு குழு தலைவர் மோகன் கூறியதாவது: பாரம்பரியமான காங்கேயம் மாடு மற்றும் காளை இனத்தை காக்கும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படு கிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து, 450க்கும் மேற்பட்ட காங்கேயம் மாடுகள் மற்றும் காளைகள் பங்கேற்கும் என, எதிர்பார்க்கிறோம்.
காங்கேயம் இனத்தில் மயிலை, காரி, செவலை, பிள்ளை என, நிறங்களின் அடிப்படையில் ரகங்கள் உள்ளன. இம்மாடுகள் மற்றும் காளைகளை கொண்டு வருவோர், விற்பனையும் செய்வார்கள். வாங்க விருப்பம் உள்ளவர்கள் வாங்கி செல்லலாம்.
அதேநேரம், இவற்றை வளர்ப்பவர்களை ஊக்கப் படுத்தும் வகையில் கால்நடை பராமரிப்பு துறையின ருடன் சேர்ந்து போட்டிகளை நடத்துகிறோம். அதில் சிறந்த மாடு மற்றும் காளைகளுக்கு அழகு போட்டி, 20 பிரிவுகளில் நடத்தப்படும்.
அதில் பல் போடாத காரி கிடாரி, 4 பல் வரை உள்ளவை, பூச்சி காளை, 4 பல்லுக்கு மேல் உள்ளவை,
சிறந்த வண்டி எருது என, பல்வேறு பிரிவுகளாக வைத்து, 1,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை பரிசும் வழங்குகிறோம். பரிசுக்கான மாடு மற்றும் காளைகளை கால்நடைத் துறை டாக்டர்களே முடிவு செய்வார்கள். விபரங்களுக்கு,9994011117 என்ற எண்ணில் அறியலாம்.இவ்வாறு அவர் கூறினார்.